கிள்ளான் – ‘இனிமேல் இப்படி ஒருவர் பிறக்கப்போவதில்லை’- இந்த வார்த்தையை எல்லாருக்கும் சொல்லிவிட முடியாது. இம்மாதிரியான வார்த்தைக்கு வெகு சிலர் மட்டுமே தகுதியானவர்களாக இருப்பார்கள். அப்படியொரு தகுதிக்குச் சொந்தக்காரர் மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரையிசைத் துறையில் கொடிகட்டிப் பறந்து தமிழர்களின் மனதில் ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
அவர் இப்போது நம்மோடு இல்லையென்றாலும், அவரின் படைப்புக்கள் நம் மனதில் பசுமரத்தாணிபோல் காலம் காலமாக பதிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
அன்னாரின் நினைவுகளை பகிர்ந்துகொள்ளும் வகையில், கிள்ளான் விண்வெளிக் கலை மன்றம் எதிர்வரும் 15.9.2015ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (மறுநாள் விடுமுறை) இரவு 7.30மணிக்கு, ஜாலான் தெங்கு கிளானா, மாரா பஸ் நிலையத்தின் அருகே, டேவான் எம்.பி.கே. அரங்கில் “எம்.எஸ்.வியின் நினைவலைகள்” என்னும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சி முற்றிலும் இலவசமாக நடைபெறவுள்ளது.
எம்.எஸ்.வி. அவர்கள் இசையமைத்த பாடல்களை நம் கலைஞர்கள் பாடுவதோடு, அவரின் வாழ்க்கைக் குறிப்புகளோடு, அவர் படைத்த சாதனைகளையும் பாடல் பிறந்த கதைகளையும் சுவையாக எடுத்துரைக்கப்படும். புகழ் பெற்ற கலைஞர்களோடு, விண்வெளி கலை மன்றத்தின் வளர்ந்து வரும் பாடகர்களும் பங்கேற்கவுள்ளார்கள்.
கிள்ளான் ஸ்ரீ ரெங்கநாதர் பரதாலய மாணவர்கள் கண்கவர் நடனங்களையும் வழங்குவார்கள்.
பாடல், நடனம் நகைச்சுவை என பல அங்கங்கள் தாங்கி இந்நிகழ்ச்சி மலரவுள்ளது. எம்.எஸ்.வியின் நினைவுகளோடு ஓர் இனிய மாலைப் பொழிதைக் கழிக்க அனைவரையும் விண்வெளிக் கலை மன்றத்தார் அழைக்கிறார்கள்.
மேல் விபரங்களுக்கு ஹரிகிருஷ்ணன் 016-3272392 இளவரசு 016-3949265 என்ற எண்களுக்குத் தொடர்புகொள்ளலாம்.