கிள்ளான் – தமிழ்த் திரைப்படங்களுக்குத் தொடக்கக் காலத்தில் பின்னணி பாடிய முதல் பாடகர் திருச்சி லோகநாதன். அவர்களின் மூத்த புதல்வர் டி.எல்.மகராஜன், புகழ் பெற்ற திரைப்படப் பாடகர் என்பது அனைவரும் அறிந்ததே.
பாரம்பரிய இசை மரபுப் பின்னணியில் தோன்றியவரான டி.எல்.மகராஜன், செவ்விசை நயம் தோயும் பாடல்களைப் பாடுவதில் தனித்த சிறப்புடன் விளங்கி வருகிறார். தமிழை உச்சரிக்கும் பாங்கால் இசைத் தமிழுக்கு உயிரூட்டி தமிழ் இசைக்கு ஏற்றம் நல்கி வருகிறார். இவர் இசைத் திறனைப் போற்றும் வண்ணம் தமிழக அரசு இவருக்கு கலமாமணி விருதளித்து கௌரவித்துள்ளது.

கலைமாமணி டி.எல். மகராஜன் மலேசிய மேடைகளையும் தம் இசைவண்ணத்தால் அலங்கரித்துள்ளார். தனிக் கச்சேரிகளும் நடத்தியுள்ளார். தொடர்ந்து அவ்வப்போது நடத்தி வருகிறார். இது மலேசிய கலைஞர்களுக்கு ஊக்கம் தரும்; புதிய அனுபவங்களை ஏற்படுத்தும் தொண்டாகும். இவரைப் போன்ற கலைஞர்களைப் பாராட்டுவது மலேசியக் கலைஞர்கள் ஊக்கம் பெற வழிவகுக்கும் எனக் கருதி, இவருக்குப் பொற்பதக்க விருது வழங்க விண்வெளிக் கலைமன்ற முன் வந்துள்ளது.
அதே நிகழ்ச்சியில், மலேசிய இசை உலகில் புகழ்பெற்ற பாடகராய் விளங்கும் திரு. இரகுராமன் அவர்களுக்கும் அவர் இசைத் திறனைச் சிறப்பிக்கும் வண்ணம் விருதளித்துக் கௌரவிக்க விண்வெளிக் கலைமன்றம் முடிவெடுத்துள்ளது.

பாடகர் இரகுராமன் புற ஒளிச் சுடரையே காணாதவர். செவி வழியாகத் தாமே இசை ஒலிப்பேழைகள் மூலம் இசைப் பயின்று சங்கீதச் செறிவுடைய பாடல்களையும் செவ்விசைப் பாங்கு குறையாமல் பாடக்கூடியவர்.அவர் தமிழ் உச்சரிப்புப் பிறழாமல் பாடுவதில் வல்லவராய்த் திகழ்கிறார். தாமே விசைஇசை (கீபோர்ட்) கருவியை வாசித்துக்கொண்டே தனியராய் அமர்ந்து கச்சேரி நடத்தும் அளவுக்குத் திறன் பெற்றவர். மலேசியத் தமிழிசை வளர்ச்சிக்கு இவரின் பங்கு போற்றதலுக்குரியது. இவருக்கு விண்வெளிக் கலைமன்றம் ‘வாழ்வியல் வண்ணங்கள்’ நிகழ்ச்சியில் பொற்பதக்க விருதளித்துச் சிறப்பு செய்யவுள்ளது.
மேற்படி நிகழ்ச்சி எதிர்வரும் சனிக்கிழமை ஏப்ரல் 6-ஆம் தேதி சரியாக இரவு 7.00 மணிக்கு கிள்ளான் நகராண்மைக் கழக மின்நூலக அரங்கத்தில் (Auditorium e-Library MPK, Jalan Tengku Kelana, Klang) நடைபெறுகிறது. நுழைவு இலவசம்.
இந்த நிகழ்ச்சியில் செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் தியாகராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வதோடு நிகழ்ச்சிக்கும் தலைமை தாங்குவார்.
வாழ்வியல் வண்ணங்கள் என்னும் அந் நிகழ்ச்சியில் இறையருட் கவிஞர் சீனி நைனா முகமது, முனைவர் முரசு நெடுமாறன், கவித் தென்றல் பொன் மகேந்திரன் ஆகியோரின் இனிய பாடல்கள் கேட்கும் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். தவறாமல் இந்த நிகழ்ச்சியில் கலந்து இன்புற அன்பர்களை விண்வெளிக் கலைமன்றம் அன்புடன் அழைக்கிறது.
நிகழ்ச்சி உரிய நேரத்தில் தொடங்க அனைவரும் முன்னதாகவே வருகை தந்துதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தொடர்புக்கு: 016-3949265 (இளவரசு), 019-3619235 (பழனி), 016-3272392 (ஹரி)