கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீதான 42 மில்லியன் ரிங்கிட் வழக்கு விசாரணை இன்று புதன்கிழமை தொடங்க உள்ளது.
தற்செயலாக, இதே நாளில் 10 ஆண்டுகளுக்கு முன்னர், பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினருமான நஜிப், ஆறாவது பிரதமராக பதவியேற்றார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கு விசாரணை இன்று மதியம் 2 மணிக்கு நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் காசாலி முன்னிலையில் விசாரிக்கப்படும்.
66 வயதுடைய நஜிப், மூன்று குற்றச் செயல்களுக்காக இந்த வழக்கு விசாரணையை எதிர் கொண்டுள்ளார். எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிறுவனத்துக்குச் சொந்தமான 42 மில்லியன் ரிங்கிட்டை மோசடி செய்தக் குற்றத்திற்காக அவர் இன்று விசாரிக்கப்பட உள்ளார்.
அரசாங்கத் தலைமை வழக்கறிஞர், டோமி தோமஸ் இந்த வழக்கு விசாரணைக் குழுவை தலைமை வகிக்க உள்ளார். மேலும், துணை அரசாங்க வழக்கறிஞர்களான டத்தோ சுலைமான் அப்துல்லா மற்றும் டத்தோ வி. சிதம்பரம் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.