Home கலை உலகம் ஓம்ஸ் அறவாரிய ஆதரவில், விண்வெளிக் கலைமன்ற ஏற்பாட்டில் ‘வாழ்வியல் வண்ணங்கள்’ புதுமை நிகழ்ச்சி

ஓம்ஸ் அறவாரிய ஆதரவில், விண்வெளிக் கலைமன்ற ஏற்பாட்டில் ‘வாழ்வியல் வண்ணங்கள்’ புதுமை நிகழ்ச்சி

1728
0
SHARE
Ad

கிள்ளான் – எதிர்வரும் சனிக்கிழமை ஏப்ரல் 6-ஆம் தேதி இரவு 7.00 மணிக்குக் கிள்ளான் தெங்கு கிளானா, நகராண்மைக் கழக இ-லைப்ரரி அரங்கத்தில் “வாழ்வியல் வண்ணங்கள்” என்னும் நிகழ்ச்சியை கிள்ளான் விண்வெளிக் கலை மன்றத்தார் ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் பல புதிய படைப்புகள் ‘யுடியுப்பு’ (youtube) வழி அறிமுகம் காண உள்ளது. மேலும் இரண்டு மாபெரும் கலைஞர்கள் சிறப்பு விருது பெற உள்ளனர்.

பாடகர் டி.எல்.மகராஜன்

தமிழிசைக்கு நீண்டகாலம் தொண்டாற்றி வரும் திரைப்படப் பாடகர் கலைமாமணி டி.எல்.மகராஜன் அவர்களும், மலேசிய நாட்டில் தூய தமிழ் உச்சரிப்பொடு பாடி இசைத் துறையில் சிறந்து விளங்கும் பாடகர் இரகுராமன் அவர்களும் இந்நிகழ்ச்சியில் விருது பெறவிருக்கின்றனர்.

இவ்விருவரின் புதிய பாடல்கள் காணொளியாக யுடியுப்பில் அறிமுகம் காணவுள்ளது. கவிஞர் சீனி நைனா முகம்மது, முனைவர் முரசு நெடுமாறன், கவிஞர் பொன். மகேந்திரன் ஆகியோரின் பாடல்களும் இடம்பெறவுள்ளன. அவற்றோடு ஆத்திசூடி, பாடல் வடிவம் பெற்றுள்ளது.

பாடகர் இரகுராமன்
#TamilSchoolmychoice

தேவாரம் மற்றும் குழந்தைகளுக்கான நிறைய காணொளிகள் இந்நிகழ்ச்சியில் அறிமுகம் காணவுள்ளன. பல சுவைகளைத் தாங்கி நிற்கும் இந்நிகழ்ச்சிக்கு நுழைவு இலவசம்.

அனைத்துப் பாடல்களையும் கேட்டு மகிழ அறிமுகப்படுத்தப் படவுள்ளனவே தவிர விற்பனை ஏதும் இந்நிகழ்ச்சியில் இடம்பெறாது.

ஓம்ஸ் அறவாரியத்தின் ஆதரவில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சிக்குச் செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் பா.தியாகராஜன் அவர்கள் தலைமை ஏற்கவுள்ளார். திரைப்படப் பாடகர் கலைமாமணி டி.எல்.மகராஜன் சிறப்பு வருகை தரவுள்ளார்.

எனவே, குடும்பத்தோடு இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்து, விருது பெறும் கலைஞர்களை வாழ்த்துவதோடு மகிழ்வூட்டும் சுவையான நிகழ்ச்சிகளைக் கண்டு இன்புறுமாறு விண்வெளிக் கலை மன்றத்தார் கேட்டுக் கொள்கின்றனர்.

நிகழ்ச்சி குறிப்பிட்ட நேரத்தில் தொடங்க அனைவரும் முன்னதாகவே வருகை தந்துதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு: 016-3949265 (இளவரசு), 019-3619235 (பழனி), 016-3272392 (ஹரி)