கோலாலம்பூர் : ஜூலை 21-23 நாட்களில் நடைபெறவிருக்கும் 11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் ஏற்பாடுகள் களைகட்டத் தொடங்கியுள்ளன.
ஓம்ஸ் அறவாரியம் ஏற்பாட்டில், செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் தியாகராஜனைத் தலைவராகக் கொண்டு மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்திய சமூகத்திற்கு மதிப்பளித்து இந்த மாநாட்டை அரசாங்கமே ஆதரவளித்து முன்னின்று நடத்தும் என்ற அறிவிப்போடு, மாநாட்டுக் குழுத் தலைவராக அமைச்சர் வ.சிவகுமாரையும், இணைத் தலைவராக மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணனையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நியமித்தார்.
இதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ஓம்ஸ் தியாகராஜன், சிவகுமார், சரவணன் உள்ளிட்ட ஏற்பாட்டுக் குழுவினர் கலந்து கொண்டனர். அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பின் படக் காட்சிகளை இங்கே காணலாம்.
இந்த சந்திப்பில் உரையாற்றிய சரவணன், மாநாட்டுக்கு சிறப்பாகப் பங்களித்த ஓம்ஸ் தியாகராஜனுக்கு பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்தார்.
ஜூலை 22-ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் பிரதமர் மாநாட்டை அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைப்பார்.
உலக நாடுகளில் இருந்து பல அறிஞர் பெருந்தகைகளும், கல்வியாளர்களும், ஆய்வாளர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் நாட்டு அரசாங்கத்தைப் பிரதிநித்தும் சில முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.