சென்னை – உலகம் எங்கிலும் சினிமா இரசிகர்களால் தரமான படைப்புகளாக கொண்டாடப்படுபவை ஈரானிய சினிமாப் படங்கள்.
அந்த வரிசையில் பிரபல ஈரானிய திரைப்பட இயக்குநரான மஜித் மஜிதி எடுத்து வரும் ஈரானியப் படம் ஒன்றிற்கு இசைப்புயல் ஏ.ஆர்.இசையமைத்து வருகின்றார் என்பது கடந்த சில மாதங்களாக பெரிதாகப் பேசப்பட்டு வந்தது.
ஆனால், அந்தப் படமே இப்போது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
முகம்மது நபியின் பெயரைத் தலைப்பாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள அந்த ஈரானிய மொழி திரைப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக ‘பத்வா’ எனப்படும் மார்க்கத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மும்பையைச் சேர்ந்த சன்னி பிரிவு இஸ்லாமிய இயக்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மஜித் மஜிடி (படம்) ஏற்கனவே இயக்கி 1997இல் வெளிவந்த ஈரானிய சினிமா ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ அவரையும், ஈரானிய சினிமாவையும் உலகளவில் பேச வைத்த படம்.
இந்தப் படத்தில் ஒரு ஜோடி ஷூவையும் இரண்டு சிறு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு உலக ரசிகர்களை மஜித் மஜிதி சினிமா ரசனையை இன்னொரு கட்டத்திற்குக் கொண்டு சென்றதாகக் கூறுவார்கள்.
இவரது இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள ‘முஹம்மத்: மெசஞ்சர் ஆப் காட்’ என்ற ஈரானிய மொழி திரைப்படத்துக்குத்தான் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
ஈரான் அரசின் நிதியுதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு முஹம்மது நபியின் பெயர் சூட்டப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முஹம்மது நபியின் பெயருடன் வெளியாகும் இந்தப் படத்தைப்பற்றி மக்கள் தவறாக விமர்சித்தால் அது அவரை இழிவுபடுத்துவதாக அமைந்துவிடும் என்றும், எனவே, இந்தப் படத்தை திரையிடக் கூடாது எனவும் மும்பையில் உள்ள சன்னி பிரிவினர் கடந்த வாரம் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
தங்களது எதிர்ப்பையடுத்து, இந்தப் படத்தை வெளியிடும் முயற்சியை படத்தின் இயக்குனர் கைவிடாததால், இயக்குனர் மஜித் மஜிதி, மற்றும் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக ‘பத்வா’ எனப்படும் மார்க்கத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மும்பையை சேர்ந்த சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ராசா அகாடமியின் பொதுச் செயலாளர் சயீத் நூரி தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தை இந்தியாவில் வெளியிடக் கூடாது என இந்திய அரசாங்கத்திற்கு இந்த ராசா அகாடமி கோரிக்கையும் விடுத்துள்ளது.