Home Featured நாடு புதிய தமிழ் நாளிதழ் “புதிய பார்வை” இன்று வெளியானது! – ‘தினக்குரல்’ வெளிவரவில்லை!

புதிய தமிழ் நாளிதழ் “புதிய பார்வை” இன்று வெளியானது! – ‘தினக்குரல்’ வெளிவரவில்லை!

1218
0
SHARE
Ad

Puthiya Paarvai-first page-first day-13 Sept 2015கோலாலம்பூர் – தற்போது ஆறு தமிழ் நாளிதழ்கள்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், புதிதாக ‘புதிய பார்வை’ என்ற பெயரில் மற்றொரு நாளிதழ் இன்று வெளியாகியுள்ளது.

ஆனால், நேற்று வரை வெளிவந்து கொண்டிருந்த ‘தினக்குரல்’ நாளிதழ் இன்று வெளிவரவில்லை. இதனைத் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ்ப் பத்திரிக்கைகளின் எண்ணிக்கை தொடர்ந்து 6 ஆக இருந்து வருகின்றது.

சில மாதங்களுக்கு முன்பு வரை 7 தமிழ்ப் பத்திரிக்கைகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், ‘நம் நாடு’ என்ற பத்திரிக்கை நிறுத்தப்பட்டு, தமிழ் நாளிதழ்களின் எண்ணிக்கை 6ஆகக் குறைந்தது.

#TamilSchoolmychoice

இன்று ‘தினக்குரல்’ வெளிவராததற்கான காரணம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் அந்தப் பத்திரிக்கையை நடத்தும் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கிடையில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் பத்திரிக்கை நிறுத்தப்பட்டிருக்கலாம் என சம்பந்தப்பட்ட சில வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்று வெளியான ‘புதிய பார்வை’ பத்திரிக்கை, அப்படியே தினக்குரலின் வடிவம், பின்னணி வண்ணங்களோடு வெளியீடு கண்டது என்றாலும், அந்தப் பத்திரிக்கையிலும் ‘தினக்குரல்’ ஏன் வெளிவரவில்லை என்ற அதிகாரபூர்வமான அறிவிப்புகள் ஏதும் இல்லை.

தலையங்கத்தில் ‘தினக்குரல்’ ஏன் வெளிவரவில்லை என்ற விளக்கம்

Thinakural-last publication-12 sept 2015

தினக்குரல் – இறுதியாக வெளிவந்த நேற்றைய பதிப்பு

இருப்பினும், பத்திரிக்கையின் இரண்டாவது பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் தலையங்கத்தில், “தினக்குரல் மூன்று ஆண்டுகாலமாக வெளிவந்திருந்தாலும், சில சட்ட ரீதியான அணுகுமுறைகளாலும், அதனுடைய பயணத்தைத் தொடர்வதில் சில தொடர் சிக்கல் இருப்பதாலும், அதற்கொரு மாற்று வழித் தடத்தில் பயணத்தைத் தொடர உங்கள் அன்புக் கரங்களில் ‘புதிய பார்வை’யை இன்று தவழ விட்டிருக்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதிலிருந்து தினக்குரல் பத்திரிக்கைக்கு மாற்றாக, அதே நிர்வாகத்தின் கீழ் வெளிவருகின்றது எனக்கருதப்படுகின்றது.

பத்திரிக்கையின் வெளியீட்டு நிறுவனமாக ‘விம்லன் எண்டர்பிரைஸ்’ என்ற நிறுவனம் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

பத்திரிக்கையின் ஆசிரியர் யார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இல்லையென்றாலும், இன்றைய புதிய பார்வை பதிப்பின் தலையங்கத்தை பெரு.அ.தமிழ் மணி எழுதியிருக்கின்றார்.

மேலும் “தமிழ்மணியைக் கேளுங்கள்” கேள்வி பதில் அங்கத்திற்கு வாசகர்கள் தங்களின் கேள்விகளை அனுப்பலாம் என்ற அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், புதிய பார்வை பத்திரிக்கையின் ஆசிரியர் பொறுப்பை மூத்த பத்திரிக்கையாளரும், அரசியல் விமர்சகருமான திரு.பெரு.அ.தமிழ்மணி ஏற்றுக் கொண்டுள்ளார் எனத் தெரிகின்றது.

புதிதாக உதயமாகியுள்ள, ‘புதிய பார்வை’ – மலேசியத் தமிழ் இலக்கிய உலகிலும், சவால் மிக்க தமிழ்ப் பத்திரிக்கை உலகிலும், முத்திரை பதிக்கவும் வெற்றி நடை போடவும் ‘செல்லியல்’ சார்பாக வாழ்த்தி வரவேற்கின்றோம்.