கோலாலம்பூர், ஜூலை 4 – கடந்த மூன்று மாதங்களாக வெளிவந்து கொண்டிருந்த ‘புதிய பார்வை’ நாளிதழ் இன்று வெளிவரவில்லை. மற்றொரு நாளிதழான தினக்குரல் இன்று முதல் வெளிவரத் தொடங்கியதை அடுத்து, புதிய பார்வை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழ்ப் பத்திரிக்கை வட்டாரங்கள் தெரிவித்தன.
இனி புதிய பார்வை வார இதழாக வெளிவரலாம் என்றும் ஒருசில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நாளிதழின் உள்துறை அமைச்சு அனுமதியை நிலைநிறுத்திக் கொள்ளும் நோக்கில் புதிய பார்வை இனி வார இதழாக வெளிவரக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகின்றது.
அண்மையக் காலங்களில் தமிழ் நாளிதழ் அனுமதிகள் மீதிலான தங்களின் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள உள்துறை அமைச்சு அதிகாரிகள்,
அனுமதி பெற்றுவிட்டு அச்சில் நீண்ட காலத்திற்கு வெளிவராமல் தாமதமாகும் தமிழ் தினசரிகளின் அனுமதியை ரத்து செய்துவிடும் போக்கைத் தற்போது கடைப்பிடித்து வருகின்றனர்.
மூன்று மாதங்களுக்கு முன்னால் தினக்குரல் உள்துறை அமைச்சால் தற்காலிகத் தடை உத்தரவு வழங்கப்பட்டு, நிறுத்தப்பட்டபோது, அதற்கு பதிலாக புதிய பார்வை கொண்டுவரப்பட்டது.
தினக்குரல் பத்திரிக்கையின் அதே ஆசிரியர் குழுவினர், அதே நிர்வாகப் பணியாளர்கள் ஆகியோரின் மேற்பார்வையில் புதிய பார்வை வெளிவரத் தொடங்கியது.
தற்போது ஏழு தமிழ் தினசரிகள் வந்து கொண்டிருப்பதால், சந்தையில் எட்டாவது பத்திரிக்கையாக போட்டியிடுவது சிரமமாக இருக்கும் என்ற நோக்கத்தில் புதிய பார்வை நிறுத்தப்பட்டிருக்கலாம் எனத் தெரிகின்றது.
புதிய பார்வை பத்திரிக்கையில் சம்பந்தப்பட்டவர்கள், பின்னணியில் இருந்து தினக்குரல் பத்திரிக்கைக்கு முழு ஆதரவை வழங்க முடிவெடுத்திருப்பதாகவும் அதனால் இனி புதிய பார்வை தற்காலிகமாக வெளிவராது என்றும் அந்தப் பத்திரிக்கையோடு தொடர்பு கொண்ட, பெயர் குறிப்பிட விரும்பாத பிரமுகர் ஒருவர் செல்லியல் தகவல் ஊடகத்திடம் தெரிவித்தார்.
இன்று முதல் வரத் தொடங்கியுள்ள தினக்குரல் பத்திரிக்கையோடு தற்போது மொத்தம் ஏழு தமிழ் தினசரிகள் மலேசியாவில் வெளிவந்துகொண்டிருக்கின்றன.