சென்னை, ஜூலை17- காவல்துறையினருக்கென்றே தனியாக ஒரு பல்கலைக் கழகம் 50 ஏக்கரில் அமைய உள்ளது.
இதற்குமுன் விளையாட்டுக்கென்று தனியாக ஒரு பல்கலைக்கழகம்’ விளையாட்டுப் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் அமைக்கப்பட்டது.
தற்போது, காவல்துறையினருக்கென்று தனியாகப் பல்கலைக்கழகம் அமைக்கப்படுவது சிறப்பானதாகும்.
சென்னை அருகே தையூரில், தமிழக அரசுக்குச் சொந்தமான சர்வே எண் 1442/1A-ல் சுமார் 200 ஏக்கர் தரிசு நிலம் உள்ளது.
இந்நிலத்தில் தமிழகக் காவல்துறையின் எஸ்ஐடி பிரிவினருக்குத் தலைமை அலுவலகம் கட்ட, 50 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக முதலில் தகவல் வெளியானது.
தற்போது அங்கே தமிழகக் காவல் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புப் பல்கலைக்கழகம் அமைய உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இந்த இடத்தை நேற்று முன்தினம் காவல்துறைத் துணை ஆணையர் பெரியய்யா, காவல்துறைக் கண்காணிப்பாளர் மங்களலட்சுமி ஆகியோர் பார்வையிட்டனர்.
இதைத் தொடர்ந்து, தையூரில் பல்கலைக்கழகம் அமையும் இடத்தைக் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் உள்துறைச் செயலாளர் அபூர்வ வர்மா நாளை பார்வையிட்டு இறுதி செய்ய உள்ளார்.
இதற்காக வருவாய்த் துறையினர் நிலத்தை ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.