தஞ்சோங் காராங், ஜூலை 19 – தனக்கு நடைபெறவிருந்த திருமணத்திற்காக இந்துக் கடவுளின் ஆசி பெறவேண்டியும், சிலைகளை கடலுக்குள் விடவும், தனது குடும்பத்தாருடன் கடலுக்குள் படகில் சென்ற 27 வயதுடைய பெண்மணி ஒருவரும் அவருடன் சென்ற குடும்பத்தாருமாக 6 பேர், அப்படகு விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக பலியாகினர். இந்தச் சோகச் சம்பவம் தஞ்சோங் காராங் பகுதியில் (பாகான் சுங்கை காஜாங்) வியாழக்கிழமை நிகழ்ந்துள்ளது.
படகைச் செலுத்திய ஒருவரும் மாண்டதில் மரண எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
14 பேருடன் அன்றைய தினம் அப்படகு கடலுக்குள் சென்றது. பாகான் சுங்கை காஜாங் கடற்கரையிலிருந்து சுமார் 2 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்த போது கடல் சீற்றம் காரணமாக அப்படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். இதைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் சிலர், விரைந்து சென்று உயிருக்குப் போராடியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் அவர்களால் 7 பேரை மட்டுமே மீட்க முடிந்தது.
இறந்தவர்களில் 5 பேரின் சடலம் உடனடியாக மீட்கப்பட்ட நிலையில், பாரியநாதன் (30 வயது) என்ற ஆடவரின் சடலம் பாகான் பாசிர் கடற்பகுதியில் சனிக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டது. சங்கர் என்ற மற்றொரு நபர் இன்னமும் தேடப்பட்டு வருகிறார்.
9 குடும்ப உறுப்பினர்கள் மற்றும் 5 படகுக்காரர்கள் சம்பவத்தன்று படகில் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.