மும்பை, ஜூலை 19 – 40,000 கோடி ரூபாய் கடனில் இருக்கும் ஏர் இந்தியா நிறுவனம், அதில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. அதன் படி, தற்போது சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை விற்பதற்கு முடிவு செய்துள்ளது.
ஏர் இந்தியாவின் சொத்துக்களை விற்க, உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம், இதற்கென புதிதாக கேபினட் குழு ஒன்றை அமைத்துள்ளது. அக்குழுவின் மேற்பார்வையில், ஏர் இந்தியாவின் சொத்துக்கள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாகவே, கடன் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா, பல்வேறு நிதி அமைப்புகளின் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது. அந்நிறுவனத்தின், சொத்துக்களும் கடன் பிரச்சனையால் பிணையாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மும்பை, சென்னை மற்றும் கோவையில் இருக்கும் சொத்துக்களை விற்பதற்கு தற்போது முடிவு செய்துள்ளது. அதன்படி, மும்பையில் இருக்கும் அந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு 90 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் கோவையை பொருத்தவரை, அதன் சொத்து மதிப்புகள் முறையே, 120 மற்றும் 30 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இது குறித்து விமான போக்குவரத்து அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏர் இந்தியாவின் சொத்துக்களை விற்பதற்காக கேபினட் குழு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களும் சொத்துக்களை விற்பதில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே மத்திய அமைச்சகம், நாட்டின் தேசிய விமான போக்குவரத்தின் 2,400 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பாதுகாப்பதில் தீவிரம் காட்டி வருகின்றது. இதற்காக, வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீடுகளையும் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.