புது டெல்லி, ஜூலை 19 – “குறுந்தகவல், அழைப்புகள் என அனைத்தையும் இலவசமாக வாட்ஸ்அப், ஸ்கைப், வைபர் போன்ற செயலிகள் வழங்கிவிட்டால் நாங்கள் என்ன செய்வது?” என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உறக்கக் கூறிய வார்த்தைகளும், இணைய சமநிலையை குழப்பம் வகையில் கொண்டுவர முயன்ற சில திட்டங்களும், மத்திய தொலைத்தொடர்புத் துறை ஆணையத்தை விழிக்கச் செய்துள்ளது. வாட்ஸ்அப், ஸ்கைப், வைபர் போன்ற அனைத்து இலவச அழைப்புகளையும் முறைப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக இணையசமநிலையை குழப்பும் வகையில், ஏர்டெல் நிறுவனமும், பேஸ்புக்கும் செயல்பட்ட விதம் பலத்த எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. அவற்றின் சில திட்டங்களின் படி, தங்களுக்கு தனியாக கட்டணம் செலுத்தும் நிறுவனங்களின் இணைய பக்கங்களை மட்டும் முன்னுரிமை கொடுத்து அதிவேக சேவையுடன் அளிக்க இருப்பதாக அறிவித்தன. இதனால், அத்தகைய குறிப்பிட்ட நிறுவனங்களின் இணைய பக்கங்களை பார்க்க இணையதள ஆர்வலர்கள் தனியாக கட்டணம் செலுத்த வேண்டியநிலை ஏற்படும்.
இதற்காக, ஏர்டெல் நிறுவனம் அறிவித்த திட்டம் தான் ‘ஏர்டெல் ஜீரோ’ (Airtel Zero). அதேபோன்று பேஸ்புக் உருவாக்கிய திட்டம் தான் ‘இன்டர்நெட்.ஆர்க்’ (Internet.org). இந்திய இணையவாசிகளின் பலத்த எதிர்ப்புகளுக்குப் பிறகு, இத்திட்டங்களை மேற்கூறிய நிறுவனங்கள் இந்தியாவில் பெரிய அளவில் செயல்படுத்தவில்லை.
இந்நிலையில், இணையசமநிலை காக்க இந்திய இணையவாசிகள் இணையப் போராட்டம் நடத்தத்துவங்கினர். நிலைமையை உணர்ந்த மத்திய அரசு, மத்திய தொலைத்தொடர்புத்துறை ஆலோசகர் ஏ.கே.பார்கவா தலைமையில் சில முக்கிய அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்தது. அந்தக் குழு, தனது இறுதி அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், இணைய சமநிலை காக்கப்படும் என உறுதி அளித்துள்ளது. அதேசமயம், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் ஆதரவு அளிக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தது.
குறிப்பிட்ட அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“இணைய தளங்களில், அதை பயன்படுத்துபவர்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும். சட்டப்பூர்வமான எந்த விஷயங்களையும் பார்க்கவோ, அனுப்பவோ, பெறவோ, வெளியிடவோ தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களும், இணையதள சேவை நிறுவனங்களும் எந்த கட்டுப்பாடும் விதிக்க முடியாது. பேஸ்புக் நிறுவனத்தின் இன்டர்நெட்.ஆர்க் திட்டம், இணைய சமநிலைக்கு எதிரானது. அதனை யாரும் ஊக்குவிக்கக்கூடாது.”
“அதேபோல், ஏர்டெல் ஜீரோ திட்டத்தை செயல்படுத்த டிராய்-ன் ஒப்புதல் அவசியம். ஸ்கைப், வாட்ஸ்அப், வைபர், பேஸ்புக் மெசேஞ்சர் போன்ற இணையவழி அழைப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த இலவச அழைப்புகளால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பாதிக்கப்படக் கூடாது. அதேபோன்று இந்த செயலிகள் தேசப் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். தேசப் பாதுகாப்புதான், எல்லாவற்றையும் விட முதன்மையானது.”
“சாதாரண செல்பேசி அழைப்புகள் அதிக கட்டணத்திலும், இணையவழி அழைப்புகள் மிகக் குறைந்த கட்டணத்திலும் இருப்பதே இந்த பிரச்சனைகளுக்கு மூலக் காரணம். அதனால் இவை அனைத்தையும் வரைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளோம்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.