பனாஜி, ஜூலை 20 – கோவாவின் தலைநகர் பனாஜியில் இருந்து சற்று தொலைவில் இருக்கும் மொரிஜிம் என்ற கடற்கரை பகுதியில், ராட்சத முதலை ஒன்று சுற்றுத் திரிவதைக் கண்ட சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஆரம்பத்தில் இந்த தகவல் வதந்தி என்று அறிவிக்கப்பட்டாலும், கோவா வனத்துறை தற்போது முதலை நடமாட்டத்தை உறுதி செய்துள்ளது.
மொரிஜிம் கடற்பகுதிக்கு வெளிநாட்டினர் வைத்துள்ள பெயர் ‘லிட்டில் ரஷ்யா’ (Little Russia) ஆகும். அந்த அளவிற்கு இந்த கடற்கரைப் பகுதிக்கு ரஷ்ய சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வர். இந்நிலையில், இந்த பகுதியில் வசித்து வரும் நிலேஷ் பாகர் என்பவர், சமீபத்தில் முதலை ஒன்று அங்கு சுற்றிவருவதாகத் தெரிவித்தார். அதனை நிரூபிக்கும் விதமாக அந்த முதலையை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவு செய்தார்.
அவர் பதிவு செய்துள்ள புகைப்படத்தில், மிகப் பெரிய முதலை ஒன்று கடற்கரை மண்ணில் ஆள்நடமாட்டம் இல்லாத சமயத்தில், சர்வசாதாரணமாக சுற்றி வருகிறது. முதலைக்கு பின்னால் சில நாய்கள், மிரண்டு போய் நிற்பதும் அந்த புகைப்படத்தில் தெரிகிறது. ஆரம்பத்தில் நிலேஷின் தகவல்களை அசட்டை செய்த கோவா வனத்துறை, புகைப்படங்களை ஆய்வு செய்த பிறகு முதலையின் நடமாட்டத்தை உறுதி செய்துள்ளது.
இது தொடர்பாக கோவா மாநில இணை முதன்மை வனப் பாதுகாவலர் கூறுகையில், “சபோரா நதி குறிப்பிட்ட அந்த பகுதியில் தான் கடலில் இணைகிறது. அந்த ஆற்றில் இருந்து முதலை கடலில் இறங்கியிருக்கலாம் ” என்று அவர் கூறியுள்ளார்.
சுற்றுலாப்பயணிகள் அதிகம் குவியும் அந்த கடற்கரை பகுதியில் முதலை தென்பட்டுள்ளதால், கோவா சுற்றுலாத்துறை அதிகாரிகள் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.