லண்டன், ஜூலை 20 – “ஐஎஸ் இயக்க தீவிரவாதிகளை அழிப்பதே எங்கள் இலக்கு. அதற்காக அமெரிக்காவிற்கு, பிரிட்டன் உறுதுணையாக இருக்கும்” என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் பெருகி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் அச்சறுத்தல் தொடர்பாகவும், அந்த இயக்கத்தை அழிப்பதில் இங்கிலாந்தின் நிலைப்பாடு என்ன என்றும் அந்நாட்டு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி கேட்டு வருகின்றன. இந்நிலையில், இது தொடர்பாக டேவிட் கேமரூன் அளித்துள்ள பேட்டியில், “ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்காவோடு இணைந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அழிப்பதில் இங்கிலாந்து அரசு உறுதியாக உள்ளது. நாம் இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விவாதிக்கின்றனர்.”
“இதில் எந்தவொரு சந்தேகமும் வேண்டாம், ஐஎஸ் இயக்க தீவிரவாதிகளை அழிப்பதே எங்கள் இலக்கு. அதற்காக நாங்கள் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவோம். தீவிரவாதிகளுக்கு எதிரான இந்த போரில் பிரிட்டன் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்பதே எனது நோக்கம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் சமீபத்தில் ஆறு வல்லரசு நாடுகளுடன் ஈராக் மேற்கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தம் பற்றி கூறுகையில், “ஈராக் கையில் அணுஆயுதம் இருப்பதை விட இந்த ஒப்பந்தம் மிகச் சிறந்தது” என்று அவர் தெரிவித்துள்ளார்.