கோலாலம்பூர், ஜூலை 20 – பிரபல ‘சரவாக் ரிப்போர்ட்’ செய்தி நிறுவனத்தின் இணையதளம், மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தால் (எம்சிஎம்சி) முடக்கப்பட்டுள்ளது.
அந்த இணையதளம் வெளியிட்ட சில குறிப்பிட்ட செய்திகள் தேசத்தின் நிலைத் தன்மையை சீர்குலைப்பதாகக் கூறி எம்சிஎம்சி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இது குறித்து எம்சிஎம்சி தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், ஆதாரமற்ற தகவல்களைப் பயன்படுத்தி புகார்களை எழுப்பிய குற்றத்திற்காக, தகவல்தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998, பிரிவு 211 மற்றும் 233-ன் கீழ், சரவாக் ரிப்போர்ட் இணையதளம் முடக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது.
1எம்டிபி விவகாரத்தில் சிறப்பு விசாரணைக்குழு தங்களின் விசாரணைகள் அனைத்தையும் நிறைவு செய்யும் வரை அந்த இணையதளம் முடக்கப்பட்டிருக்கும் என்றும் எம்சிஎம்சி குறிப்பிட்டுள்ளது.
1எம்டிபி விவகாரத்தில், பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுதாக ‘சரவாக் ரிப்போர்ட்’ இணையதளத்தில், அண்மையில் பல குற்றச்சாட்டுகள் அடங்கிய கட்டுரைகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.