கோலாலம்பூர், ஜூலை 20 – ஆசிய நாடுகளுக்கு விமானம் மூலம் பயணம் செய்வது என்றால் அந்த பயணம் பற்றிய எச்சரிக்கை தேவை என்பது போல் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி நிறுவனம், ஆசிய நாடுகளின் விமான வழித்தடங்கள் பற்றியும், போக்குவரத்து முறைகள் பற்றியும் விமர்சித்துள்ளது. இது தொடர்பாக ‘ஃபை மேஜர் ரிஸ்க்ஸ் டு ப்ளையிங் இன் ஏசியா’ (Five Major Risks to Flying in Asia) என்கிற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரையில், குறிப்பாக இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் விமான ஓடு பாதைகள் ஆடு, மாடுகளின் மேய்ப்பிடங்களாக உள்ளது என்கிற ரீதியில் குறிப்பிட்டுள்ளது.
ஆசிய விமானப் போக்குவரத்து குறித்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் குறிப்பிடும் 5 முக்கிய இடர்பாடுகள்:
“ஆசிய நாடுகளில் விமானப் போக்குவரத்து வளர்ச்சிப் பாதையில் பயணித்தாலும், நிபுணர்களைப் பொருத்தவரையில் அது என்றும் ஆபத்து நிறைந்தது தான்” என்கிற ரீதியில் அந்தக் கட்டுரை தொடங்குகிறது.
ஓடுபாதை அல்ல மேய்ப்பிடங்கள்:
விமான ஓடுபாதை எப்பொழுதும், ஆசியாவில் பெரிதாக மதிக்கப்படுவதில்லை. பொதுவாக ஆடு-மாடுகளும், மனிதர்களும் ஓடுபாதையில் அடிக்கடி குறுக்கிட்டு விமானியை கதிகலங்க வைக்கின்றனர். குறிப்பாக இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் இந்த காட்சியை அதிகம் காணலாம்.
2014-ல், ஸ்பைஸ்ஜெட் விமான ஒன்று வானில் பறப்பதற்கு ஆயத்தமான சமயத்தில் ஓடுபாதையில் எருமை ஒன்று விமானத்தின் குறுக்கே வந்தது. இதனால் விமானி அவசரமாக விமானத்தை தரை இறக்கினார். இதே போன்று, இந்தோனேசியாவிலும் நடந்த சம்பவம் பற்றி அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோசமான வானிலை ஆராயும் கருவி கூட இல்லை:
மோசமான வானிலை அனைத்து நாடுகளிலும் ஏற்படத்தான் செய்யும். ஆனால், ஆசியாவில் மோசமான வானிலையை முன்கூட்டியே அறிவதற்கான உயர் தொழில்நுட்ப கருவிகள் ஒரு சில நாடுகளைத் தவிர பெரும்பான்மையான நாடுகளில் இல்லை. இதற்கு, சமீபத்திய உதாரணம், ஏர் ஏசியா 8501 விமானம் இந்தோனேசியக் கடலில் விழுந்து 162 பயணிகள் பலியான சம்பவம் தான்.
பாதுகாப்பான விமான போக்குவரத்து திட்டம் இல்லை:
மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பாவைப் போல் விமானப் போக்குவரத்தை தானியங்கியாக சரி செய்து கொள்ளும் பாதுகாப்பு அமைப்புகள் ஆசியாவில் குறைவு தான். ஆசியா-பசிபிக் வட்டாரங்களில் ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் நியூஸிலாந்து நாடுகள் மட்டுமே பாதுகாப்பான விமான போக்குவரத்திற்கு உத்தரவாதம் அளிக்கின்றன.
மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகள் தற்போது தான் விமானப் போக்குவரத்து மேலாண்மையில் புதுமையை புகுத்துவதற்கு முயன்று வருகின்றன.
விமானிகளுக்கு பயிற்சியே இல்லையாம்:
பாகிஸ்தானில், கடந்த 2012-ல் போஜா ஏர்லைன்ஸ் விமானம் உக்கிரமான புயலால் சிக்கித் தவித்த போது, அடுத்து என்ன செய்வது என்பதை யோசிக்காமல் விமானி, “எனது வாழ்வில் இனி அமைதியைக் கொடு” என கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தார். ஒலிப்பதிவு செய்யும் கருவியில் இது பதிவாகியது.
இறுதியாக விமானம் விபத்திற்குள்ளானதில் 127 பயணிகள் உயிரிழந்தனர். விசாரணையில், முதன்மை விமானிக்கும், துணை விமானிக்கும் போதிய அனுபவமும், பயிற்சியும் இல்லாதது தெரியவந்தது. சம்பளப் பிரச்சனையைக் காரணம் கூறி, பல நாடுகளில் அனுபவம் குறைவான விமானிகளே விமானத்தை இயக்குகின்றனர். (இது குறித்து அந்த கட்டுரையில் உதாரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன)
ஆபத்தான தரையிறக்கம்:
ஆசியாவில், சீனாவைத் தவிர வேறு எந்த நாடுகளும் சரியான விமான பாதுகாப்பு உபகரணங்களையும், வசதிகளையும் பயன்படுத்துவதில்லை. இதில் இந்தியாவும் அடங்கும். பல ஓடுபாதைகள் பழைய இராணுவ விமான துறைகளில் இருந்து எடுக்கப்பட்டவையாக உள்ளன. அவற்றின் நீளம் பெரிய விமானங்கள் தரையிறங்குவதற்கு போதுமானதாக இல்லை.
கடந்த 2010-ம் ஆண்டு, துபாயில் இருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா விமானம், வழக்கமான தரையிறங்கும் பாதையில் கட்டுப்பாட்டை இழந்தது. விமானி ஓடுபாதையைத் தாண்டி பயணிக்கையில், எதிரே எய்ட்ஸ் பதாகை தாங்கிய உறுதியான கட்டமைப்பை கவனித்து அதிர்ச்சி அடைந்தார். எனினும், அவர் எதிர்பார்க்கும் முன்னர் விமானம் விபத்திற்குள்ளாகி 158 பேர் உயிரிழந்தனர்.
இவ்வாறாக அந்த கட்டுரையில் ஆசியாவின் விமான போக்குவரத்தில் உள்ள இடர்பாடுகள் பற்றி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நிறுவனம் புள்ளிவிவரங்களோட செய்தி வெளியிட்டுள்ளது.