Home இந்தியா புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை நிறுத்துக: தனுஷுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்!  

புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை நிறுத்துக: தனுஷுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்!  

691
0
SHARE
Ad

maariசென்னை, ஜூலை 20- திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைக் கைவிட வேண்டும் எனக் கோரி நடிகர் தனுஷுக்கு, முன்னாள் மத்தியச் சுகாதாரத்துறை அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸின் மகனுமான டாகடர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் எழுதியிருப்பது என்னவெனில்:

“இன்று தமிழ்நாட்டின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக நீங்கள் திகழ்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.

#TamilSchoolmychoice

‘மாரி’ திரைப்படத்தின் ஏராளமான காட்சிகளில் நீங்கள் புகைப்பிடித்தபடி நடித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் உங்களுடைய ரசிகர்களாக இருக்கும் நிலையில், இந்தத் தவறான செயல் உங்கள் ரசிகர்களைப் புகையிலைக்கு அடிமையாக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்றே நம்புகிறேன்.

இளைஞர்களிடையே புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரிப்பதற்குத் திரைப்படங்களில் இடம்பெறும் புகைப்பிடிக்கும் காட்சிகள் முக்கியக் காரணமாக உள்ளன.

தமிழகத்தின் முன்னணி நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்டவர்கள் திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என வாக்குறுதி அளித்து, அதனை உறுதியாகப் பின்பற்றியும் வருகின்றனர்.

அதைவிட முக்கியமாக, உங்களது மாமனாரும், தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் எனப் புகழப்படுபவருமான நடிகர் ரஜினிகாந்த், திரைப்படங் களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், தனது ரசிகர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட்டுவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் உங்களது செயல் உங்களது மாமனார் நடிகர் ரஜினிகாந்தின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்துவதாக அமைகிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எனவே, தமிழ்நாட்டின் பல லட்சம் சிறுவர்கள், இளைஞர்களின் எதிர்கால நலன் கருதித் திரைப்படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை நீங்கள் கைவிட வேண்டும். மேலும், இனி, திரைப்படங்களில் புகைப்பிடிக்க மாட்டேன் எனப் பகிரங்கமாக அறிவிக்கவும் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக இளைஞர்களின் நலனுக்காக மட்டுமின்றி, உங்களது உடல்நலத்துக்காகவும் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை நீங்கள் கைவிட வேண்டும் என்று உங்களது சகோதரனாக, ஒரு மருத்துவனாகக் கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் நீண்ட ஆயுளைப் பெற்று, தமிழ்த் திரையுலகில் பலப்பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன்”

இவ்வாறு அக்கடிதத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ், தனு‌ஷைக் கேட்டுக் கொண்டுள்ளார்.