Home நாடு எம்எச்17: மாஸ் மீது வழக்கு தொடுத்த ஆஸ்திரேலியர்

எம்எச்17: மாஸ் மீது வழக்கு தொடுத்த ஆஸ்திரேலியர்

547
0
SHARE
Ad

MH17-logo_fi_c1117336_14718_30கோலாலம்பூர், ஜூலை 20 – எம்எச்17 பேரிடரில் பலியான சிட்னியைச் சேர்ந்த ஆசிரியையின் மகன், மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளார்.

எம்எச்17 பேரிடர் நிகழ்ந்து ஓராண்டு பூர்த்தியடைந்துள்ள நிலையில், டிம் லாஸ்செட் என்ற அந்நபர் இது தொடர்பாக ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக சிட்டி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.

“விமானப் பேரிடரில் எனது தாயார் மரணடைந்ததை அடுத்து வீட்டை விற்க நேரிட்டது. வேலையையும் இழக்க நேரிட்டது. எனக்கு இழப்பீடாக 113,110 ஆஸ்திரேலிய டாலர் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் 50 ஆயிரம் டாலர் மட்டுமே வழங்கப்பட்டது. இது தொடர்பில் அனைத்துலக விமானப் போக்குவரத்து விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை,” என 24 வயதான டிம் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.

#TamilSchoolmychoice

தனது தாயாரிடம் இருந்து தாம் பெற்று வந்த அன்பு, அரவணைப்பு, பயிற்சி, வழிகாட்டுதல், கல்வி, ஊக்கம் ஆகியவற்றையும், பொருளாதார உதவியையும் தற்போது இழந்து தவிப்பதாக டிம் கூறினார் என அவரது வழக்கறிஞர்களை மேற்கோள் காட்டி சிட்னி மார்னிங் ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

“தாயின் மறைவுக்குப் பிறகு டிம் தனது பணியையும் தக்க வைத்துக் கொள்ள இயலவில்லை. அவர் மனோத்துவ ரீதியில் காயமடைந்துள்ளார். தனது வழக்கறிஞர்கள் மூலம் மாஸ் நிறுவனத்திடம் டிம் எழுப்பிய கேள்விகள் எதற்கும் பதில் கிடைக்கவில்லை. எனவே தான் அவர் வழக்கு தொடுக்கும் முடிவுக்கு தள்ளப்பட்டார்,” என்றும் அப்பத்திரிகைச் செய்தி மேலும் கூறுகிறது.

டிம்மின் தாய் கேப்ரியல் லாஸ்செட் (48 வயது) சிட்னியில் உள்ள அனைத்துலகப் பள்ளி ஒன்றில் பணியாற்றி வந்தார். விதிவசத்தால் கடந்த ஆண்டு ஜூலை 17ஆம் தேதி நிகழ்ந்த எம்எச் 17 பேரிடரில் பலியான 298 அப்பாவிகளில் அவரும் ஒருவரானார்.