சாவ் பாலோ, ஜூலை 20 – பிரபல கால்பந்து வீரர் பீலே மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாவோ பாலோ நகரில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், முதுகெலும்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் பிரேசில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காற்பந்து உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான பீலேவுக்கு தற்போது 74 வயதாகிறது. கடந்த சில மாதங்களாகவே அவர் முதுகெலும்பில் ஏற்பட்ட பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார்.
மேலும் 2012ஆம் ஆண்டு முதலே அவருக்கு தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தது. கடந்த மே மாதம் அவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் 4 நாட்களுக்குப் பின்னர் வீடு திரும்பியதால் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.
இதேபோல் கடந்த ஆண்டு நவம்பரில் அவருக்கு சிறுநீரகத்தில் இருந்த கல் அகற்றப்பட்டது. அதன் பின்னர் சிறுநீரகத் தொற்று பாதிப்பு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. எனினும் இதுகுறித்த மேலதிக தகவல்கள் எதையும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனை வெளியிடவில்லை. அவரது குடும்பத்தார் விடுத்த வேண்டுகோளை ஏற்று மருத்துவமனை நிர்வாகம் மவுனம் காப்பதாகக் கூறப்படுகிறது.
எனினும், பீலே நலமுடன் இருப்பதாகவும், திங்கள்கிழமை அவர் வீடு திரும்பக்கூடும் என்றும் கூறப்படுகிறது.