டோக்கியோ, ஜூலை 20 – “இரண்டாம் உலகப் போரின் போது தங்கள் நாட்டிடம் சரணடைந்த போர்க்கைதிகளை அடிமைத் தொழிலாளர்களாக நடத்தினோம். அதற்காக தற்போது நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்” என ஜப்பானின் மிக முக்கிய பன்னாட்டு நிறுவனமான மிட்சுபிஷி தெரிவித்துள்ளது.
போர்க்கைதியாக இருந்த ஜேம்ஸ் மர்பி
இது குறித்து அந்நிறுவனத்தின் மூத்த நிர்வாகி ஹிகரு கிமுரா லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த விழா ஒன்றின் போது கூறுகையில், “எங்கள் நிறுவனத்திற்காக சுரங்கத்தில் கைதிகள் வேலை செய்தனர். நாங்கள் நடந்து கொண்ட விதத்திற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்பது எங்கள் கடமை” என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், ஜப்பானில் அமெரிக்க போர்கைதியாக இருந்தவர்களில் ஒருவரான ஜேம்ஸ் மர்பியும் (94) கலந்து கொண்டார். மிட்சுபிஷி கைதிகளை அடிமைகளாக நடத்தியதை ஒப்புக்கொண்ட அவர், ஹிகரு கிமுராவின் மன்னிப்பையும் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், “இந்த நாளுக்காகத் தான் 70 வருடங்களாக காத்திருந்தோம். நான் ஹிகரு கிமுராவின் பேச்சை உன்னிப்பாக கவனித்தேன். அதில் உண்மையும், கண்ணியமும் இருந்தது.”
“அடிமை வாழ்க்கை என்பது மிகவும் கொடியது. தாமிர சுரங்கத்தில் ஒருவருட காலமாக நான் அடிமை வேலை பார்த்தேன். இந்த அவலம் பல்வேறு இடங்களில் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. நாங்கள் அனுபவித்த துயரங்களுக்காக மிட்சுபிஷி, இதுவரை எந்தவொரு இழப்பீடும் எங்களுக்கு கொடுக்கவில்லை. ஆனால், அவர்கள் கேட்ட மன்னிப்பே மிகப்பெரிய இழப்பீடு தான்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.