Home கலை உலகம் “ஆஸ்ட்ரோ மலேசியத் தயாரிப்புகளை கண்டுகொள்வதே இல்லை”-வாதிடுகின்றார் எஸ்.பி.சரவணன்!

“ஆஸ்ட்ரோ மலேசியத் தயாரிப்புகளை கண்டுகொள்வதே இல்லை”-வாதிடுகின்றார் எஸ்.பி.சரவணன்!

1287
0
SHARE
Ad

Saravananகோலாலம்பூர், ஜூலை 22 – (நேற்று செல்லியலில் இடம்பெற்ற “விண்மீன் எச்.டி. மலேசியத் தொலைக்காட்சி அலைவரிசையாக கருதலாமா? ஒரு விவாதம்!” என்ற தலைப்பிலான கட்டுரைக்கு செல்லியல் வாசகரும், ‘மலேசிய கலை உலகம்’ நிர்வாக ஆசிரியருமான எஸ்.பி.சரவணன் (படம் – பேஸ்புக்) வரைந்துள்ள எதிர்வாதக் கடிதம்)

ஆசிரியர் அவர்களுக்கு,

ஆஸ்ட்ரோ விண்மீன் அலைவரிசை தொடர்பில், விவாதம் என்ற பெயரில் ஆஸ்ட்ரோவுக்கு சாதகமாக எழுதப்பட்டிருந்த கட்டுரை போதுமான ஆய்வு இல்லாமல் எழுதப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

 என் வீடு என்று நான் சொல்லிக் கொண்டால், அங்கு என்னைச் சார்ந்தவர்கள், எனக்கு வேண்டியவர்கள் இருந்தால் மட்டுமே நான் என் வீடு என்று சொல்லிக் கொள்ள முடியும். அதை விடுத்து, அடையாளம் தெரியாதவர்கள் குடியிருக்கும் வீட்டில் நின்று கொண்டு, என் வீடு என்று பெருமை கொள்வது போல் இருக்கிறது விண்மீனின் கதை.

சம்பந்தமே இல்லாத டிவி தீகாவுடன் இணைத்து விண்மீன் பேசப்படுவது நியாயமும் இல்லை. டிவி தீகா இலவச தனியார் நிலையம். ஆஸ்ட்ரோ அப்படியல்ல. நாங்கள் அதன் வாடிக்கையாளர்கள். கேள்வி கேட்க எல்லா உரிமையும் உள்ளது.

உலக நிலையில் இந்தியர்களின் வளர்ச்சியில் பெருமை கொள்வோம். யாரோ ஒருவரின் உழைப்பை தன்னுடையது என்று ஆஸ்ட்ரோ சொல்லிக் கொள்வதையும், அதற்கு மலேசியர்கள் என்ற முறையில் பெருமை கொள்ளவேண்டும் என்பது அபத்தமான ஒன்று. யாரோ ஒருவரின் பிள்ளை தன் பிள்ளை என்று அடையாளம காட்டிக் கொள்ள ஆஸ்ட்ரோ முயல்கிறது.

தரமான படைப்புகள் இல்லை என்ற குற்றச்சாட்டை செல்லியல் முன்வைத்திருக்கிறது. மலேசியாவின் தரமான படைப்புகளை மக்களுக்கு காட்டிவிடக்கூடாது என்பதே ஆஸ்ட்ரோவின் எண்ணம்.

நடுவன் எனும் பாடல் மிகவும் தரமாக தயாரிக்கப்பட்டிருந்தது. அதனை ஆஸ்ட்ரோ ஒளியேற்றவில்லை. பல்வேறு காரணங்களை கூறியது. மக்கள் தொலைக்காட்சி அந்த பாடலை ஒளிப்பரப்பியது.

இப்படி தரமான படைப்புகளை ஆஸ்ட்ரோ மறைத்துவிட்டது. இந்திய தயாரிப்புகளை தேடி எடுத்து போடும் ஆஸ்ட்ரோ, மலேசிய தயாரிப்புகளை கண்டு கொள்வதே இல்லை.

உலக நாடுகளில் உள்ள முன்னணி தொலைக்காட்சி நிலையங்கள் மறற உலக நாடுகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளனர். அவர்களின் ஏஜெண்டாக ஆஸ்ட்ரோ செயல்பட தொடங்கியுள்ளது.

இன்னும் நிறைய ஆதங்கங்கள் உள்ளன.

இப்படிக்கு

எஸ்.பி.சரவணன்

குறிப்பு : இதனை உங்கள் செல்லியலில் வெளியிடுவீர்களா?

(ஆசிரியர் பின்குறிப்பு: இந்தக் கடிதத்தை வரைந்துள்ள செல்லியல் வாசகரான திரு எஸ்.பி.சரவணன் உள்நாட்டுக் கலைஞர்களைப் பற்றித் தொடர்ந்து தமிழ் நாளிதழ்களில் எழுதி ஆதரவு தந்து வருபவர். ‘மலேசிய கலை உலகம்’என்ற இணைய ஊடகத்தின் ஆசிரியர். “இந்தக் கடிதத்தை வெளிடுவீர்களா?” என்ற அவரது ஐயப்பாட்டுக்கு பதிலாக அவரது இந்தக் கடிதத்தை ஒரு வரி கூட திருத்தாமல் அப்படியே பதிவேற்றம் செய்திருக்கின்றோம்.

இந்த வேளையில் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.

வாசகர்கள் நமக்கு அனுப்பும் எந்த கருத்துக்களையும், வாதங்களையும் பாரபட்சமின்றி நாங்கள் செல்லியலில் பதிவிடுவோம். அவை தனிமனிதச் சாடல்களாக இருக்கக் கூடாது. சட்ட ரீதியான  பிரச்சனைகளை உருவாக்கக் கூடியவையாக இருக்கக்கூடாது அவ்வளவுதான்.

திரு எஸ்.பி.சரவணன் மேலே தெரிவித்துள்ள கருத்துகளில் ஓர் அம்சத்தில் மட்டும் மீண்டும் எங்கள் தரப்பு வாதத்தை வலியுறுத்த விரும்புகின்றோம்.

தொலைக்காட்சி அலைவரிசையை அந்தக் கண்ணோட்டத்திலேயே பார்க்க வேண்டும்.

Vinmeen HD

ஒரு தொலைக்காட்சி அலைவரிசை என்னும் போது, அதனை அதன் தொழில்நுட்பத்தில்தான் பார்க்க வேண்டுமே ஒழிய, நமது விருப்பு வெறுப்புகளை, நமக்கு நேர்ந்த சம்பந்தமில்லாத விஷயங்களை அதனுடன் நுழைக்கக் கூடாது.

உதாரணமாக, நாம் நமது கட்டுரையில் வலியுறுத்தியது போல் உள்நாட்டுப் படைப்புக்களுக்கு இடம் கொடுப்பது என்பது தனியான விவாதப் பொருள். விவாதிப்போம்.!

ஆனால், அதனை விண்மீன் சிங்கை செல்லும் விவகாரத்திற்குள் நுழைப்பது நியாயமா என்பதை வாசகர்களின் முடிவுக்கே விட்டு விடுகின்றோம்.

அதே போல்தான், “நமது வீடு” – “யாரோ பெற்ற பிள்ளை” – “மற்றவர்களின் உழைப்பு” – போன்ற வாதங்கள்.

உதாரணத்திற்கு மலேசியாவில் புரோட்டோன் காரைத் தயாரிக்கின்றோம். இதன் இயந்திரம் ஜப்பானுடையது. சில பொருட்கள் வெளிநாடுகளில் செய்யப்பட்டு பொருத்தப்படுகின்றது. காரிலுள்ள குளிர்சாதன வசதி போன்ற சில தொழில்நுட்பங்களும் வெளிநாட்டின் உருவாக்கம். எல்லாவற்றையும் ஒருங்கே பொருத்தி மலேசியாவில் தயாரிக்கப்படும் கார் வெளிநாட்டுக்கு ‘மலேசியத் தயாரிப்பு’ என்ற முத்திரையுடன்தான் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

இதனைக் குறை கூறுவீர்களா? மற்றவர்களின் உழைப்பில் புரோட்டோன் பெயர் வாங்குகின்றது என்று வாதிடுவீர்களா?

அதேபோல் தான் மாஸ் நிறுவனமும்! எங்கோ தயாரிக்கப்படும் போயிங், ஏர்பஸ் விமானங்களை நாம் வாங்கி விட்டு, அதில் ‘மலேசியா ஏர்லைன்ஸ்’ என்ற வண்ணமடித்து விட்டு, வெளிநாட்டு விமானி ஒருவரை வேலைக்கு அமர்த்திக் கொண்டு (இப்போது தலைமை நிர்வாகியே வெள்ளைக்கார வெளிநாட்டுக்காரர்தான்), மலேசிய விமான சேவை என விளம்பரப்படுத்துகின்றோம்.

அதற்காக “யாரோ பெற்ற பிள்ளை” விமானத்தை நமது நாட்டு விமானமாக சொந்தங் கொண்டாடுகின்றோம் எனப் பொருள் கொள்ளலாமா?

இவையெல்லாம் அந்தந்த தொழிலின் நடைமுறைகள். தொழில்நுட்பங்கள். அதேபோல்தான் ஒரு தொலைக்காட்சி அலைவரிசை தொழில்நுட்பம் என்பதும்! ஒரு தொழிலை – தொழில் நுட்பத்தை – அதன் கண்ணோட்டத்தில்தான் பார்க்க வேண்டுமே – அதற்கு சம்பந்தமில்லாத அம்சங்களை நுழைத்து வாதிடுவது நியாயமா?

‘நடுவன்’ பாடலை ஒளிபரப்பவில்லை என்று கூறி, துல்லிய ஒளிபரப்பில் நமக்குப் பெருமை சேர்க்கும் விண்மீன் என்ற ஒட்டுமொத்த அலைவரிசையையே – அஸ்ட்ரோவையே – குறை சொல்வதும் – அந்த விண்மீன் சிங்கை செல்லும் விவகாரத்தில் இந்த விஷயத்தை நுழைப்பதும் நியாயமா என்பதையும் வாசகர்கள் சீர்தூக்கிப் பார்க்கட்டும்.

உண்மையில், ‘நடுவன்’ பாடலின் உருவாக்கம் குறித்தும், அதில் பங்கேற்ற கலைஞர்களின் நேர்காணலைக் கொண்டும், அஸ்ட்ரோ வானவில் 360 டிகிரியில், ஒரு தனி நிகழ்ச்சியே ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதோ நடுவன் பாடல் குறித்த அஸ்ட்ரோ நிகழ்ச்சியை https://www.youtube.com/watch?v=88nKf6NOXDs இணைப்பை அழுத்துவதன் மூலம் காணலாம்.

மேலும், ‘நடுவன்’ பாடலை இசையமைத்த அதே டாக்டர் பர்ன் இசையில் உருவான மற்றொரு தரமான பாடலான ‘பாடகன்’ அண்மையில் கூட அஸ்ட்ரோவில் ஒளிபரப்பானதாக அறிகின்றோம்.

அதே வேளையில், ‘நடுவன்’, ‘பாடகன்’ ஆகிய இரண்டு பாடல்களிலும் பங்குபெற்ற கலைஞர்களில் ஒருவரான கணேசன் மனோகரன், தற்போது விண்மீன் எச்டி அலைவரிசையில் நடைபெற்று வரும் ‘இண்டர்நேஷனல் சூப்பர் ஸ்டார் 2015’ நிகழ்ச்சியில், மலேசியாவைப் பிரதிநிதித்து போட்டியிடும் 5 பாடகர்களில் ஒருவராக உள்ளார் என்பதையும் அறிகின்றோம். அவர் பிரதிநிதித்துள்ள குழுவின் பெயர் கூட விண்மீன் தான். (என்ன பொருத்தம் பாருங்கள்).

Vinmeen

 

 

ஒரு காலத்தில், தொலைக்காட்சியில் ஒரு நாடகம் இடம் பெறுவதற்காக – ஒரு ‘மத்தாப்பு’ நாடகத்துக்காக – எத்தனைப் போராட்டங்கள் நடத்தியிருக்கின்றோம் –

அரைமணி நேர ‘தும்புவான் மிங்கு’ (பெயர்கூட தமிழில் அப்போது சூட்டப்படவில்லை) நிகழ்ச்சி ஒன்றுக்காக ஒரு வாரம் காத்திருந்திருக்கின்றோம்.

வாரத்துக்கு ஒரு தமிழ்ப்படத்தை நிலைநிறுத்துவதற்கு எவ்வளவு பேச்சுவார்த்தைகள் – டிவி 3இல் இந்திப் படங்கள் போடுகின்றார்கள் – தமிழ்ப்படமும் வாரத்துக்கு ஒன்று வேண்டும் என்ற கோரிக்கைக்காக எத்தனை அறைகூவல்கள் – அறிக்கைகள்! மஇகா அமைச்சர்களுக்கு எத்தனை திட்டுகள்!

ஒரு சிகரெட் நிறுவனம், ஒரு தமிழ்ப்படத்தை ஒளிபரப்ப ஆதரவு (ஸ்பான்சர்) தராத காரணத்திற்காக, அந்த நிறுவனத்தின் சிகரெட்டுகளையே  நடுரோட்டில் போட்டு எரித்து போராட்டம் நடத்திய வரலாற்றுக்குரியவர்கள் நாம்!

பொதுத் தேர்தல் நேரத்தில் வாரத்துக்கு ஒரு தமிழ்ப்படம் கூடுதலாக ஒளிபரப்பியதற்காக பாராட்டு மழைகளால் தேசிய முன்னணி அரசாங்கத்தை நனைத்து – இதற்காகவேனும் தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்துவோம் எனக் குரல் கொடுத்த பெருமைக்குரியவர்கள் நாம்!

இன்றைக்கு, 14 தொலைக்காட்சி தமிழ் அலைவரிசைகள் – எத்தனையோ உள்நாட்டு தமிழ் உள்ளடக்கங்கள் – எல்லாவற்றுக்கும் மேலாக தென்கிழக்காசிய வட்டாரத்தின் முதல் தமிழ் துல்லிய ஒளிபரப்பாக விண்மீன் – அதுவும் சிங்கையில் கால்பதிக்கும் அளவுக்கு முன்னேற்றம் – இவ்வளவும் நிகழ்ந்தது அஸ்ட்ரோவினால் தான்.

ஆனால், இன்னும் அந்த ஒரு பாடலை ஒளிபரப்பவில்லை என்று குறை கூறிக் கொண்டிருக்கின்றோம்.

-ஆசிரியர்