கோலாலம்பூர், ஜூலை 23 – வாட்ஸ்அப் பயனர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் மேம்பாடுகளை, அந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புதிய மேம்பாடுகளின் படி பயனர்கள், வாட்ஸ்அப் அழைப்புகளின் போது அதிகமாகும் டேட்டா பயன்பாடுகளை (Data Usage), தாங்களாகவே குறைத்துக் கொள்ள முடியும். அதே போல், தனித்தனி நபர்களுக்கான ‘நோட்டிஃபிக்கேஷன் டோன்களையும்’ (Notification Tone) இனி வாட்ஸ்அப்பில் அமைத்துக் கொள்ள முடியும்.
இது தொடர்பாக, அண்டிரொய்டு போலிஸ் தளம் வெளியிட்டுள்ள தகவலில், “வாட்ஸ்அப் அழைப்புகளின் போது அதிகமான டேட்டா வீணாகிறது என நினைக்கும் பயனர்கள், தாங்களாகவே டேட்டாவின் அளவை குறைத்துக் கொள்ளும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மேம்பாட்டினால் குறைந்த அளவே டேட்டா உள்ளவர்கள், எளிதாக வாட்ஸ்அப் அழைப்புகளை பேச முடியும். இதற்காக, ‘செட்டிங்க்ஸில்’ (Settings), ‘நெட்வொர்க் யூசேஜ்’ (Network Usage) என்ற புதிய தேர்வு மேம்படுத்தப்பட்டுள்ளது.”
“நோட்டிஃபிக்கேஷன்களைப் பொறுத்தவரையில், இனி பயனர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நோட்டிஃபிக்கேஷன்கள் வராதவாறு தடுக்க முடியும். மேலும், தனித்தனி நபர்களுக்கான நோட்டிஃபிக்கேஷன் டோன்களையும் இனி மேம்படுத்திக் கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல், கூகுள் டிரைவ்வில் வாட்ஸ்அப் உரையாடல்களை ‘பேக்அப்’ (Back Up) செய்து கொள்ளும் வசதியும் நடைமுறைக்கு வந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.
எனினும், இந்த புதிய மேம்பாடுகள் v2.12.194 பதிவுகளில் மட்டுமே அறிமுகமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.