சிங்கப்பூர், ஜூலை 23 – சிங்கப்பூரில் பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்கள், தங்கள் குடும்பத்தினரை அழைத்து வருவதற்கு சிங்கப்பூர் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் சம்பள வரம்பின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள் தொடர்பாக மனிதவள அமைச்சகம் தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “பணி செய்வதற்கான விசா வைத்திருக்கும் ஊழியர்கள், தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளை இங்கு அழைத்து வர வேண்டுமெனில் குறைந்தபட்சம், மாதம் 5000 சிங்கப்பூர் டாலர்கள் சம்பளம் பெறுபவர்களாக இருக்க வேண்டும். அப்படி உள்ளவர்களுக்கு மட்டும் குடும்பத்தினரை அழைத்து வர அனுமதி வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.
இதற்கு முன் இந்த வரம்பு 4000 சிங்கப்பூர் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், பெற்றோர்களை நீண்ட கால விசாவில் வரவழைக்க விரும்புவோருக்கான சம்பள வரம்பு, 10,000 சிங்கப்பூர் டாலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், இந்த வரம்பு 8000 டாலர்களாக இருந்தது. இந்த நடைமுறை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.