Home இந்தியா திமுக மதுவிலக்கு வாக்குறுதி: கேள்விகளால் துளைத்தெடுத்த அன்புமணி!   

திமுக மதுவிலக்கு வாக்குறுதி: கேள்விகளால் துளைத்தெடுத்த அன்புமணி!   

660
0
SHARE
Ad

Dr Anbumaniசென்னை, ஜூலை 22 – 2016-ம் ஆண்டு தேர்தலில், திமுக ஆட்சிக்கு வந்தால் பூரண மது விலக்கை நடைமுறைப்படுத்துவோம் என்று திமுக தலைவர் கருணாநிதியும், பொருளாளர் ஸ்டாலினும் அனைத்து பொதுக் கூட்டங்களிலும் அறிக்கை வெளியிட்டு வரும் நிலையில், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் மதுவிலக்கு வாக்குறுதி தொடர்பாக 10 கேள்விகளை கேட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ஸ்டாலினிக்கு அனுப்பி உள்ள அந்த கடித்ததில் அவர் கூறியிருப்பதாவது:-

“உங்கள் கட்சித் தலைமையின் கருத்தை வலுப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு, சொன்னதை செய்யும் கழக அரசு, முழு மதுவிலக்கையும் நடைமுறைப்படுத்தும் என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை முகநூலில் பதிவு செய்திருக்கிறீர்கள்.

#TamilSchoolmychoice

அதைப் படித்ததும் திமுகவின் முரண்பட்ட நிலைகள் தொடர்பாக என் மனதில் எழுந்த 10 வினாக்களை இக்கடிதத்தில் வரிசைப்படுத்தியிருக்கிறேன். இவை மக்கள் மனதிலும் எழுந்துள்ள வினாக்கள் என்பதால், இவற்றுக்கு நீங்கள் விடையளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

1. தமிழ்நாட்டில் 4 வயது குழந்தை கூட மது குடிக்கும் அவல நிலை ஏற்பட்டதற்கு காரணம் யார்?

2. 1971-ம் ஆண்டில், ராஜாஜி கொட்டும் மழையில் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்று, மதுவிலக்கை ரத்து செய்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட போதிலும், அதை பொருட்படுத்தாமல் 23 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மதுவிலக்கை ரத்து செய்தவர் யார்?

3. மது மூலம் கிடைக்கும் வருவாய் என்பது புழுத்துப்போன தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்குவதற்குச் சமம் என்று அண்ணா கூறினார். மது கூடவே கூடாது என்று பெரியார் கூறினார். ஆனால், பெரியார், அண்ணாவின் கொள்கைகள் தேவையில்லை, வருமானம் தான் முக்கியம் எனக் கருதி மதுக்கடைகளை திறந்தவர் யார்?

4. புதிய மது ஆலைகளுக்கு அனுமதி அளிப்பதில்லை என 30 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த விதியை தளர்த்தி, தங்கள் கட்சியைச் சேர்ந்த இரு முன்னாள் மத்திய அமைச்சர்கள், வேண்டிய இருவர் உட்பட 5 பேருக்கு புதிய மது ஆலைகளை நடத்த அனுமதி வழங்கியது யார்?

5. மது விலக்கை ஏற்படுத்தும் சிந்தனை கருணாநிதிக்கு ஏற்கெனவே ஏற்பட்டுவிட்டதாக கூறியிருக்கிறீர்கள். அப்படியானால், தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று 22.12.2008 அன்று, ராமதாஸூக்கு வாக்குறுதி அளித்த கருணாநிதி, அதன்பிறகு 30 மாதங்கள் ஆட்சியில் இருந்தும், மதுவிலக்கை நடைமுறைப்படுத்தாதது ஏன்? அப்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத கருணாநிதி, இப்போது மட்டும் நிறைவேற்றுவார் என எப்படி நம்புவது?

6. 1996-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுக ஆட்சிக்கு வந்தால் முழுமதுவிலக்கு மிகத்தீவிரமாக செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்த கருணாநிதி, அதன் பின்னர் 10 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தும் அதை நிறைவேற்றாதது ஏன்? தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று 27.12.2008 அன்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதன்பின் இரண்டரை ஆண்டுகள் பதவியில் இருந்த உங்கள் அரசு அதை செயல்படுத்தாதது ஏன்? இப்படிப்பட்ட உங்களை எப்படி மக்கள் நம்புவார்கள்?

7. தமிழகத்தில் நடைமுறையில் இருந்த மதுவிலக்கை நீக்கி, கடந்த 44 ஆண்டுகளாக மதுவைக் கொடுத்து இரு தலைமுறைகளை சீரழித்தது யார்?

8. காமராஜர் முதலமைச்சராக இருந்த போது 12,000 புதிய பள்ளிகளை திறந்து அனைத்து மாணவர்களையும் படிக்க வைத்தார். ஆனால், அவருக்குப் பின் 7,000 மதுக்கடைகளை திறந்து மக்களை குடிக்க வைத்தது யார்?

9. அதிமுக தான் டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்ததாகவும், அதனால் தான் 10 ஆயிரம் பேருக்கு ஒரு மதுக்கடை என்ற நிலை ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டும் நீங்கள், உங்கள் ஆட்சியில் அந்த கடைகளை மூடாதது ஏன்?

10. மதுவின் மூலம் கிடைக்கும் வருவாய் முக்கியமல்ல, மக்கள் நலனே முக்கியம் என்று திடீரென அக்கறை காட்டுகிறீர்கள். 2006-ம் ஆண்டில் திமுக அரசு பதவியேற்ற போது ஆண்டுக்கு ரூ.6086 கோடியாக இருந்த மது வருவாயை 2011-ம் ஆண்டில் 150% அதிகரித்து, ரூ.14,965 கோடியாக இலக்கு நிர்ணயித்து உயர்த்தினீர்களே..இதனால் மக்கள் நலன் பாதிக்கப்படவில்லையா?

இந்த 10 கேள்விகளுக்கும் நீங்கள் விடை தருவீர்கள் என்று நம்புகிறேன். தமிழகத்தின் இன்றைய சீரழிவுக்குக் காரணம் உங்கள் கட்சியும், அதிமுகவும் தான். பலமுறை மீண்டும், மீண்டும் மதுவை திணித்து சீரழித்ததற்காக தமிழ்நாட்டு மக்களிடம் நீங்களும், அதிமுகவும் பாவமன்னிப்பு கேட்க வேண்டும்” என்று அன்புமணி அந்த கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.