பீஜிங், ஜூலை 23- சீனாவில் உள்ள அனைத்துத் தம்பதிகளும் இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ள அனுமதிக்கலாமா என்பது குறித்துச் சீன அரசு ஆலோசனை செய்து வருகிறது.
‘ஒரு தம்பதி, ஒரு குழந்தை’ என்ற கொள்கை சீனாவில் தாரக மந்திரம் போல் பின்பற்றப்பட்டு வருகிறது. ஏனெனில்,உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடாக சீனா இருப்பதுதான் காரணம்.
அதிலும் ஒரு விதிவிலக்கு உண்டு. கணவன் – மனைவி இருவரில் ஒருவர் அவர்களது பெற்றோருக்கு ஒரே குழந்தையாக இருந்தால், அந்தத் தம்பதியர் இரண்டு குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.
இந்நிலையில், ‘சோஹூ’ என்ற இணையதளச் செய்தி நிறுவனம் மக்கள் மத்தியில் புள்ளி விவரக் கணக்கு ஒன்றை நடத்தி, 95 சதவீதம் தம்பதியர் 2 குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்திருப்பதாகச் செய்தி வெளியிட்டது.
இதனால், அனைத்துத் தம்பதியரும் 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதிப்பது பற்றிச் சீன அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
இதுபற்றி, பீஜிங் பல்கலைக்கழக மக்கள் தொகையியல் பேராசிரியர் லு ஜிஹூவா, ‘‘தேசியச் சுகாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டு ஆணையம் அடுத்த ஆண்டு ‘ஒரு தம்பதியர், ஒரு குழந்தை’ என்ற கொள்கையை மாற்றி அமைக்க வாய்ப்பு இருக்கிறது அல்லது சீனாவின் 13–வது ஐந்தாண்டுத் திட்டத் தொடக்கத்தில் இதை அமல்படுத்தலாம்’’ எனக் கூறினார்.