Home நாடு காலியாகும் பாஸ் கூடாரம்! களை கட்டும் ஜிஎச்பி! 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள், புதிய கட்சியில் சேரலாம்!

காலியாகும் பாஸ் கூடாரம்! களை கட்டும் ஜிஎச்பி! 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள், புதிய கட்சியில் சேரலாம்!

595
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 24 – மலேசியாவில் மக்களின் கவனம் 1எம்டிபி பக்கமே இருந்துவர, இன்னொரு புறத்தில் நிகழ்ந்துவரும் சில அதிரடியான திடீர் அரசியல் மாற்றங்கள் எதிர்காலத்தில் பல அதிர்ச்சி தரும் முடிவுகளைக் கொண்டுவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Gerakan Harapan Baru Logoபாஸ் கட்சியின் முற்போக்கு சிந்தனைவாதத் தலைவர்கள் ஒருங்கிணைந்து, காபோங்கான் ஹாராப்பான் பாரு (புதிய நம்பிக்கைக் கூட்டணி எனப் பொருள்படும்) என்ற புதிய கட்சியைத் தோற்றுவித்துள்ளனர். ஜிஎச்பி என, சுருக்கமான பெயருடன் செயல்படப் போகும் இந்தக்கட்சியில் சுமார் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாஸ் கட்சியிலிருந்து விலகி இணைந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிறைக்குள் இருந்தாலும், இன்னும் எதிர்க்கட்சிக் கூட்டணிக்கான தனது அரசியல் வியூகங்களை வகுத்துக் கொண்டு, உள்ளேயிருந்தபடி வெளியில் அரசியல் மாற்றங்களை உருவாக்கி வரும் அன்வார் இப்ராகிமின் வழிகாட்டுதலில்தான் புதிய பாஸ் பிரிவினைக் கட்சி உருவாக்கம் கண்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

#TamilSchoolmychoice

புதிய எழுச்சியுடன் புதிய கூட்டணி உருவாகும் என அன்வாரும் அறிவித்திருக்கின்றார். உத்தேசமாக பக்காத்தான் 2.0 எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள கூட்டணியில் பெர்சே, போன்ற சமூகப் போராட்ட இயக்கங்களும் இணைந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

யார் அந்த பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ?

டத்தோ கமாருடின் ஜஃபார் (தும்பாட்), காலிட் சாமாட் (ஷா ஆலாம்), ஹானிபா மைடின் (சிப்பாங்) சித்தி சைலா யூசோப் (ரந்தாவ் பாஞ்சாங்), டாக்டர் ஹாட்டா ரம்லி (கோலகெராய்), முஜாஹிட் யூசுப் ராவா, டத்தோ மாபூஸ் ஓமார் (பொக்கோக் சேனா) ஆகியோர் பாஸ் கட்சியிலிருந்து விலகி ஜிபிஎச் கட்சியில் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

PAS-Logo-Slider

இவர்களில் பலர் தீபகற்ப மலேசியாவின் மேற்குக் கரையோர பகுதிகளில் உள்ள தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

பாஸ் கட்சியின் ஹூடுட் போன்ற செயல்பாடுகளால் இனி முற்போக்கு சிந்தனை கொண்ட வாக்காளர்களிடையே அந்தக் கட்சி செல்வாக்கைப் பெறுவது கடினம். அதோடு, ஜசெகவுடன் ஏற்பட்ட முறிவால், இனி சீன வாக்குகளும் அந்தக் கட்சிப் பக்கம் போக வாய்ப்பில்லை.

இந்நிலையில் ஜோகூர் தொடங்கி கெடா வரையிலான மேற்குக் கரையோரத் தொகுதிகளிலும், ஷா ஆலாம் போன்ற நகர்ப்புறத் தொகுதிகளிலும் இனி பாஸ் நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளை வெல்வது அவ்வளவு எளிதல்ல.

இதனை உணர்ந்து கொண்டுள்ள பாஸ் கட்சியின் பெரும்பாலான மேற்குப் பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் – பாஸ் கட்சியில் இனியும் தொடர்ந்தால் அடுத்த தேர்தலில் தங்களால் தத்தம் தொகுதிகளில் மீண்டும் வெல்ல முடியாது என்பதைப் புரிந்து கொண்டு –  புதிய ஜிஎச்பி கட்சி பக்கம் சாயத் தொடங்கியுள்ளனர்.

அன்வாருக்கு நெருக்கமான கமாருடின் ஜஃபார்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில், தும்பாட் கமாருடின் ஜஃபார் (படம்) மாணவப் பருவத்திலிருந்து அன்வாருடன் நெருக்கமாகச் செயல்பட்டவர்.

Kamaruddin Jaafar (Tumpat)

கமாருடின் ஜஃபார்

அன்வார், அபிம் எனப்படும் இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தைத் தோற்றுவித்து செயல்பட்டபோது, அபிமின் தலைமைச் செயலாளராகவும், பின்னர் அன்வார் அம்னோவில் இணைந்தபோது, அவருடைய அரசியல் செயலாளராக பணியாற்றியவர். பின்னர், அன்வார் அம்னோவிலிருந்து வெளியேற்றப்பட்டபோது, பிகேஆர் கட்சியில் இணைவார் என அனைவரும் எதிர்பார்த்த வேளையில் பாஸ் கட்சியில் சேர்ந்து, அதன் தலைமைச் செயலாளராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் உயர்ந்தார்.

தற்போது இவர் பாஸ் கட்சியிலிருந்து விலகி, ஜிஎச்பியில் இணைந்து தீவிரமாகச் செயல்படுவார் என்றும், அன்வாருக்கும், புதிய ஜிஎச்பி கட்சிக்கும் இடையிலான இணைப்புப் பாலமாக கமாருடின் ஜஃபார் இயங்கி வருவார் என்றும் நம்பப்படுகின்றது.

இருப்பினும் கிளந்தான், திரெங்கானு மாநிலங்களில் பாஸ் கட்சியின் ஆதரவு பலம் மங்காமல், தொடர்ந்து வலுவுடன் இருந்து வரும் என்றே கருதப்படுகின்றது. தீபகற்ப மலேசியாவின் மேற்குப் பகுதிகளில் மட்டும் பாஸ் பலத்த அரசியல் சரிவைக் காணும் என்று கூறப்படும் வேளையில், கிளந்தான், திரெங்கானு மாநிலங்களில் பிகேஆர், ஜசெக, புதிய ஜிஎச்பி இணைந்து போட்டியிடும் பட்சத்தில் பாஸ் கட்சியின் நிலைமை என்னவாகும் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்றாகும்.

-இரா.முத்தரசன்