கோலாலம்பூர், ஜூலை 24 – பெட்ரோ சவுதி இண்டர்நேஷனல் நிறுவனத்தில் இருந்து தாம் திருடிய முக்கிய ஆவணங்களுக்காக தனக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர் (7.6 மில்லியன் ரிங்கிட் ) வழங்க உறுதியளிக்கப்பட்டதாக,சுவிஸ் நாட்டைச் சேர்ந்த சேவியர் அண்ட்ரே ஜஸ்டோ தெரிவித்துள்ளார்.
தனது நிறுவனத்தை மிரட்டிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஜூன் 22ஆம் தேதி தாய்லாந்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜஸ்டோவை, ‘த ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்’ பத்திரிகை சிறையில் வைத்து நேர்காணல் செய்துள்ளது.
அந்த நேர்காணலில், அந்தத் தொகையைத் தருவதாக சொன்ன ‘மலேசியாவின் முக்கியப் பிரமுகர்’ சொன்னபடி செய்யவில்லை என்றும், அந்த ஆவணங்களைக் கொடுப்பதற்கு எவ்வளவு தொகை வழங்கப்படும், எப்படி வழங்கப்படும் போன்றவை கடந்த பிப்ரவரி மாதம் சிங்கப்பூரில் நடந்த சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது என்றும் ஜஸ்டோ கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் நடந்த இந்த பேரம் குறித்த தகவல்களை ஐஸ்டோ 22 பக்க வாக்குமூலமாக தாய்லாந்து காவல்துறைக்கு வழங்கியுள்ளார். அந்த வாக்குமூலத்தை ‘தி ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்’ பத்திரிகைக்குக் காட்டியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
“நான் இந்த பணப்பரிமாற்றங்கள் நடைபெறுவதற்காக சிங்கப்பூரில் உள்ள டிபிஎஸ் வங்கியில் கணக்கு ஒன்றை திறக்க முயன்றேன். ஆனால் அந்த வங்கி அதை நிராகரித்துவிட்டது. அது ஏன் என்று தெரியவில்லை. பின்னர் அபுதாபியில் எனது சொந்தப் பெயரில் திறக்கப் பட்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்த அவர்கள் மறுத்துவிட்டனர். காரணம் அதில் எனது சொந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டிருந்தது.”
“அதன் பின்னர் ஹாங் காங்கில் உள்ள எனது நிறுவனத்தின் வங்கிக் கணக்கை பயன்படுத்த முயற்சி செய்தேன். அப்போதும் அவர்கள் எனது பெயரில் இருப்பதால் பணம் செலுத்த முடியாது என்று கூறிவிட்டனர். அதன் பின்னர் தான் கிளேர் பிரவுன் பொறுப்பேற்றார்” என்று ஜஸ்டோ தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் பிறந்த பிரிட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்த கிளேர் பிரவுன், சரவாக் ரிப்போர்ட் இணையத்தளத்தில் நிர்வாக ஆசிரியராக ஆவார். 1எம்டிபி விவகாரத்தில் பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன் வைத்த பத்திரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.