புதுடில்லி, ஜூலை 28- ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்துக் கர்நாடக அரசு, திமுக, சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடைபெற்றது.
கர்நாடக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யாவும், திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் அந்தியர்ஜூனாவும்,ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் எல்.நாகேஸ்வரராவும் நீதிமன்றத்தில் ஆஜராகித் தங்களது வாதங்களை எடுத்துரைத்தனர்.
அப்போது கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா, “சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு நிபந்தனைகளுடன் கூடிய தடை விதித்து,ஜெயலலிதா உள்ளிட்டோரின் விடுதலையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என்று நீதிபதிகளைக் கேட்டுக் கொண்டார்.
ஆனால் நீதிபதி பினாகி சந்திர கோஷ், “மனு தொடர்பான வாதங்களுக்குப் பிறகே கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குத் தடை விதிப்பது குறித்து முடிவு எடுக்க முடியும்” எனக் கூறி, தடை விதிக்க மறுத்துவிட்டார்.
மேலும் நேற்றைய விசாரணையின் முடிவில், நீதிபதி பினாகி சந்திர கோஷ் கூறியதாவது: “இந்த வழக்கு தொடர்பான வாதங்களுக்கு ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 6 தனியார் நிறுவனங்களும் மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும்.
அதேபோல், மனுதாரர்கள் ஏதேனும் விளக்கம் தெரிவிக்க விரும்பினால் அதனை அவர்கள் அடுத்த 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இரு தரப்பு மனுக்களையும் ஆராய்ந்த பின்னர் 8 வாரங்களுக்குப் பிறகு வழக்கின் விசாரணை நடைபெறும்” என்றார்.