இஸ்லாமாபாத், ஜூலை 28- மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்குப் பாகிஸ்தான் அரசு இரங்கல் தெரிவித்துள்ளது.
ஏபிஜே அப்துல் கலாமின் மறைவிற்குச் சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் அவர்கள், “கலாம் எளியவராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் இந்தியாவின் 11-வது அதிபராகச் சேவையாற்றி, என்றைக்கும் மக்களின் தலைவராகவே வாழ்ந்தவர்” என்றும், மலேசியப் பிரதமர் நஜிப் அவர்கள், “கலாமின் இழப்பு அறிவியல் துறைக்குப் பேரிழப்பு” என்றும் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் அரசும் இரங்கல் தெரிவித்திருப்பது கவனிக்கத் தக்கதாகும்.
இது தொடர்பாகப் பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தவர் அப்துல் கலாம் என்றும், இந்தியாவிற்கு அவர் ஆற்றிய சேவைகளுக்காக, நாட்டு மக்களின் நினைவில் நீங்காமல் நிலைத்திருப்பார் என்றும் பாகிஸ்தான் அரசு அவருக்குப் புகழ் மாலை சூட்டியுள்ளதோடு, அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் எதிரி நாடாகக் கருதப்படும் பாகிஸ்தான் அரசு கூட இரங்கல் தெரிவித்து இருப்பதிலிருந்து, எதிரிகளும் மதிக்கத்தக்க தலைவராக விளங்கியவர் கலாம் என்பது புலனாகிறது.