சென்னை, ஜூலை 30- மேதகு முன்னாள் இந்திய அதிபர் அப்துல் கலாமின் மறைவுக்கு, நடிகர் கமல்ஹாசன் கவிதாஞ்சலி படைத்துள்ளார்.
அப்துல் கலாமின் மறைவைத் தாங்க முடியாமல் இந்தியாவே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. உலகத் தலைவர்களும், இந்தியத் தலைவர்களும், பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தும், அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.
திரையுலகினர் பலரும் நேரில் சென்று கலாம் அவர்களின் நல்லுடலுக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருவதைக் காண முடிகிறது.
இந்நிலையில், கமல்ஹாசன் தனது நெஞ்சார்ந்த சோகத்தைக் கவிதையாக வெளிப்படுத்திக் கவிதாஞ்சலி செலுத்தியுள்ளார்.
அவரது இரங்கல் கவிதையில் இழையோடும் சோகத்தையும், அப்துல் கலாமின் பெருமையையும் பின்வரும் கவிதையில் காணலாம்:
“சலாம் கூறும் நாளிது:
கலாம்களும், கமால்களும், கமல்களும்
இல்லாது போகும் நாள் வரும்.
இருந்தபோது, செய்தவை அனைத்துமே கணிப்பது
‘ஹெவன்’ என்று ஒருவனும்,
‘பரம்’ என்று ஒருவனும்,
‘ஜன்னத்’ என்று ஒருவனும் மாறி மாறிச் சொல்லினும்
இகத்திலேயவன் நடந்த பாதையே புகழ் பெறும்.
நிரந்தரம் தேடுகின்ற செருக்கணிந்த மானுடர்
தொண்டருக்கடிப்பொடி அம்மெயுணர்ந்த நாளிது.
புகழைத் தலையிலே ஏந்திடாது
பாதரட்சையாக்கிய கலாம் சாஹெப் என்பர்க்கு சலாம் கூறும் நாளிது!”
இவ்வாறாக நடிகர் கமல்ஹாசன் கவிதாஞ்சலி படைத்துள்ளார்.