கோத்தா கினபாலு, ஜூலை 30 – தற்போது கோத்தா கினபாலு விமான நிலையத்தின் 2ஆம் முனையத்தில் செயல்பட்டு வரும் ஏர் ஆசியா நிர்வாகம், முதலாம் முனையத்திற்கு மாற இயலாது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதியில் இருந்து முதலாம் முனையத்திற்கு இடம் மாற வேண்டுமென ஏர் ஆசியாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஏர் ஆசியா நிர்வாகம் அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிகிறது.
“எங்களால் இந்த இடமாற்றத்தை ஏற்க இயலாது. தொடர்ந்து இரண்டாம் முனையத்திலேயே செயல்படுவது என்ற உறுதியான முடிவை எடுத்துள்ளோம். இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்,” என்று ஏர் ஆசியா தலைமைச் செயல் அதிகாரி அய்ரீன் ஓமார் கூறினார்.
இடமாற்றம் காரணமாக செலவினங்கள் அதிகரிக்கும் என்று சுட்டிக்காட்டிய அவர், முதல் முனையத்தில் தங்களுக்குத் தேவையான வசதிகளை மலேசியா ஏர்போர்ட் பெர்ஹாட் இன்னும் செய்து தரவில்லை என்றார். மேலும் தாங்கள் சுட்டிக்காட்டிய பிரச்சினைகளுக்கு மலேசியா ஏர்போர்ட் பெர்ஹாட் இன்னும் தீர்வு காணவில்லை என்றும் அவர் அதிருப்தி தெரிவித்தார்.
“முதலாம் முனையத்திற்கு இடமாற்றம் செய்வதால் பயணிகளுக்கான செலவினங்களும் அதிகரிக்கும். இதன் மூலம் கேஎல்ஐஏ 2க்கு அடுத்தபடியாக கோத்தா கினபாலு இரண்டாம் முனையத்தை அதிகளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எங்களின் விருப்பத்திற்கு இந்த இடமாற்றம் பெரும் பின்னடைவாக அமையும்.
“கோத்தா கினபாலு விமான நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகளில் 50 விழுக்காட்டினர் எங்களது சேவையைத்தான் பயன்படுத்துகின்றனர். அடுத்த பத்து ஆண்டுகளுக்கான திட்டங்களை வகுத்துச் செயல்பட்டு வருகிறோம். எனவே அதிகளவு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஏர் ஆசியாவுக்கு மலேசியா ஏர்போர்ட் பெர்ஹாட் கூடுதல் ஒத்துழைப்பு நல்க வேண்டும்,” என்றும் அய்ரீன் மேலும் வலியுறுத்தி உள்ளார்.