கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 – அம்னோவை தாம் ஒருபோதும் காட்டிக் கொடுக்கப் போவதில்லை என முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.
தாம் அணி மாற வேண்டும் என தூண்டி வருவதை சில தரப்பினர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“அம்னோ அரசியல் சாசனப்படி துணைத் தலைவர் என்பவர் கட்சியின் தேசியத் தலைவருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். நான் அதன்படியே செயல்படுவேன். அது எனது கடமை” என்றார் மொகிதின்.
துணைத் தலைவர் என்ற வகையில் கட்சியின் கீழ்மட்டத் தொண்டர்கள் தன் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தனது கடமைகளை முழு மனதுடன் தொடரப் போவதாகத் தெரிவித்தார்.
“மக்களுக்காக, கட்சியினருக்காக தனது கடமைகளை ஆற்றுவதும், கட்சி எதற்காகப் போராடுகிறதோ, அதற்காக அச்சமின்றி குரல் கொடுப்பதும் நல்ல தலைவருக்கு மிக அவசியம். மக்கள் அம்னோவுக்கான தங்களுடைய ஆதரவை தொடர, எல்லாம் வல்ல இறைவனிடம் இருந்து கட்சித் தலைமைக்கு நல்ல வழிகாட்டுதல் கிடைக்க வேண்டுமென பிரார்த்திப்போம்” என்றார் மொகிதின்.
துணைப் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகிய பொறுப்புகளில் இருந்து தாம் நீக்கப்பட்ட போதிலும், தமது தோள்களில் இருந்து மிகப்பெரிய சுமைகள் இறங்கிவிட்டதுபோல் கருதுவதாக அவர் கூறினார்.
“மத்திய அமைச்சராக நியமிக்கப்படும் முன்னர், நாடாளுன்றச் செயலர், ஜோகூர் மந்திரி பெசார் எனப் பல்வேறு பதவிகளை கடந்த 37 ஆண்டுகளாக வகித்து வந்துள்ளேன். எனவே எனது அரசியல் வாழ்க்கை ஒருவித முழுமைக்கு வந்துவிட்டதாக நம்புகிறேன். எனினும் எனது தொகுதியான, பாகோ மக்களுக்காக தொடர்ந்து சேவையாற்றுவேன்,” என்றார் மொகிதின்.
தற்போது தனது குடும்பத்தாருடன், குறிப்பாக பேரக்குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முடிவதாக அவர் மேலும் கூறினார். முன்னதாக தனது தொகுதியைச் சேர்ந்த அம்னோ பிரதிநிதிகளுடன் அவர் ரகசிய ஆலோசனை மேற்கொண்டார்.