கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 – 1எம்டிபி குறித்து எதிர்மறை கருத்துக்கள் பரப்பப்படுவதாக பிரதமர் டத்தோ நஜிப் குற்றம்சாட்டி உள்ளார்.
அதே வேளையில், அரசியல் களத்தில் எதிர்த்தரப்பில் நின்றாலும், 1எம்டிபி குறித்த இத்தகைய எதிர்மறை கருத்துக்களை பாஸ் தலைவர் டத்தோ ஹாடி அவாங் நம்பவில்லை என்று நஜிப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
“குறிப்பிட் தரப்பினர் 1எம்டிபி குறித்த எதிர்மறை கருத்துக்களை உருவாக்கி வருகின்றனர். இதன் காரணமாகவே அந்நிறுவனம் மீது பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. நாங்கள் குற்றவாளிகளைப் போல் பார்க்கப்படுகிறோம்.
இந்நிலையில் எவர் ஒருவர் மீதும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை அவர் அப்பாவியே (நிரபராதியே) என்று சொன்ன டத்தோ (ஷ்ரீ அப்துல்) ஹாடி அவாங்கை இந்த இடத்தில் பாராட்ட விரும்புகிறேன்,” என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நஜிப் கூறினார்.
சமூக ஊடகங்களில் இத்தகைய எதிர்மறை கருத்துப் பரப்புரைகள் காரணமாக, 1எம்டிபி நல்ல முயற்சிகள் எதையுமே முன்னெடுக்கவில்லை என்ற கருத்து பரவுவது தமக்கு வருத்தம் தந்திருப்பதாக குறிப்பிட்ட அவர், 1எம்டிபி மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் காரணமாகமக்களுக்கு கிடைத்து வரும் ஆதாயங்கள், நன்மைகள் கூட தற்போது தவறாகப் பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.
“1எம்டிபி மீதான தாக்குதல்களைப் பார்க்கும்போது, அந்நிறுவனம் எதுவுமே செய்யவில்லை என்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. எதற்காக 1எம்டிபியை மோசமான ஒன்றாக பார்க்க வேண்டும்? அந்நிறுவனம் மேற்கொண்ட முன்னெடுப்புகள், முயற்சிகள் காரணமாக பலர் பலனடைந்துள்ளனர். தவறான எதிர்மறை கருத்துக்கள் சூழ்ந்திருக்கும்போது உண்மையைக் கண்டறிவதில் மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை” என்றார் நஜிப்.