புத்ராஜெயா, ஆகஸ்ட் 6 – பிரதமர் துறை ஊழியர்கள் தன்னுடன் ஒரே குடும்பமாகவும், குழுவாகவும் செயல்பட வேண்டும் என டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதன் மூலம் தனது புதிய அமைச்சரவையின் வழி நாட்டுக்கு சிறப்பாகச் சேவையாற்ற முடியும் என அவர் உறுதியளித்துள்ளார்.
“அனைத்துத் தரப்பு மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அரசாங்கக் கொள்கைகளை அமல்படுத்துவோம் என நானும், எனது புதிய அமைச்சரவை சகாக்களும் உறுதியளிக்கிறோம். பரஸ்பர உதவி மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் நாம் அனைவரும் ஒரே குடும்பமாக, ஒரே குழுவாக இணைந்து செயல்படுவோம். தேச உருமாற்றக் கொள்கை மீதான நமது கவனத்தை இழந்துவிடக் கூடாது.”
“தனது தலைமையின் கீழ் செயல்படும் அரசு அதிகாரிகள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்போடு நமது இலக்குகளை அடைவதில் அரசு தலைமைச் செயலர் டான்ஸ்ரீ அலி ஹம்சா வெற்றியடைவார் என நம்புகிறேன்.”
“நாளை என்பது இன்றைய தினத்தைவிட நன்றாக இருக்கும் என்பதை எப்போதுமே மனதிற்கொள்ளுங்கள். இந்த மாதத்தைவிட அடுத்த மாதம் சிறப்பானதாக இருக்கும்.
ஓர் அரசாங்கமாக, தற்போது இருப்பதை எவ்வாறு மேம்படுத்தலாம் என்கிற கோணத்தில் சிந்தித்து செயல்படுவோம்,” என்றார் நஜிப்.