கோலாலம்பூர், ஆகஸ்ட் 6 – தமது வங்கிக் கணக்கில் 2.6 பில்லியன் ரிங்கிட் தொகை நன்கொடையாக செலுத்தப்பட்டது குறித்து பிரதமரிடம் விளக்கம் கேட்கப்படும் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பகுதியைச் சேர்ந்த ஒருவர் இந்த நன்கொடையை அளித்திருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் யார் என்பதை தற்போது தெரிவிக்க இயலாது என்றும், ஊழல் தடுப்பு ஆணையம் கூறியுள்ளது.
அந்த நன்கொடையாளரிடம் பேசி இந்தத் தொகை நன்கொடையாக அளிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், இந்த குறிப்பிட்ட தொகை பிரதமர் நஜிப்பின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது ஆவணங்கள் வழி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஊழல் தடுப்பு ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
“இவ்வளவு பெரிய தொகை பிரதமரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட போது வங்கி அதிகாரிகளிடம் 4 கடிதங்கள் கொடுக்கப்பட்டதை அறிந்தோம். அவற்றின் வழி, வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட 2.6 பில்லியன் ரிங்கிட் தொகை நன்கொடையாக வழங்கப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது. இந்த நன்கொடைக்கும் 1எம்டிபி நிறுவனத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை,” என ஊழல் தடுப்பு ஆணையம் மேலும் கூறியுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் துறை செய்தித் தொடர்பாளரிடம் கருத்து கேட்க முயன்றபோது, அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என சேனல் நியூஸ் ஏசியா இணையதளம் தெரிவித்துள்ளது.