பெய்ஜிங், ஆகஸ்ட் 6 – ரியூனியன் தீவில் கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் பாகம் மாயமான எம்எச்370-ன் பாகம் தான் என்பது உறுதியாகிவிட்டதாக நேற்று நள்ளிரவில் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள மலேசியா ஏர்லைன்ஸ் அலுவலகம் முன்பு கூடிய 20-க்கும் மேற்பட்ட எம்எச்370 பயணிகளின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
கண்டறியப்பட்ட விமானப் பாகம் எம்எச்370-தினுடையது தான் என்ற அரசின் அறிவிப்பை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்ததோடு, ‘அரசியல் சூழ்ச்சியில்’ அவ்விமானம் சிக்கியுள்ளது என்றும், மலேசியா உண்மையை மறைக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
“எங்களின் அன்புக்குரியவர்கள் இன்னும் உயிரோடு தான் இருக்கிறார்கள். அந்த விமானம் மாயமாகியிருக்கலாம் ஆனால் அவர்கள் இன்னும் உயிரோடு தான் இருக்கிறார்கள். எங்களது கட்சி (கம்யூனிஸ்ட்) உதவும் என்று நம்புகின்றோம்.” என்று பயணிகளின் உறவினர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாக ‘த ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.
எம்எச்370 பயணியான டாய் ஷுலிங்கின் சகோதரி டாய் ஷுகின் (வயது 62) ‘த ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்’ பத்திரிக்கையிடம் கூறுகையில், பிரஞ்சு தீவான ரியூனியனுக்கு தங்களை அழைத்துச் செல்ல மலேசியா ஏர்லைன்ஸ் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டும் தாங்கள் வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
“விமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர்கள் கூறினார், அதை எங்களிடம் காட்டி நிரூபிக்க வேண்டும். அப்படியில்லை என்றால் நாங்கள் நம்பமாட்டோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விசாரணையில் அண்மையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து மலேசியா ஏர்லைன்ஸ் தங்களுக்கு எந்த ஒரு தகவலையும் கூறவில்லை என்றும், டத்தோஸ்ரீ நஜிப்பின் அறிவிப்பை செய்தி வழிக் கேட்டதற்குப் பின்னர் தான் தங்களுக்குத் தெரியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
படங்கள்: EPA