Home Featured தமிழ் நாடு தமிழ்நாட்டில் மது ஒழிப்பு: எதிர்க்கட்சிகளின் உணர்வுப்பூர்வமான போராட்டமா? ஆதாய அரசியலா?

தமிழ்நாட்டில் மது ஒழிப்பு: எதிர்க்கட்சிகளின் உணர்வுப்பூர்வமான போராட்டமா? ஆதாய அரசியலா?

797
0
SHARE
Ad

Karunanidhi and Jayalalithaaசென்னை, ஆகஸ்ட் 7 – பூரண மதுவிலக்கு குறித்த பிரச்சாரங்கள் பற்றி எரியும் இந்த சமயத்தில், மது ஒழிப்பு சாத்தியமா? என்பது பற்றி ஆராய்வது நமது மிக முக்கிய கடமையாகும். ஜெயலலிதாவின் ஆட்சியில் தான் மது விற்பனை அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டி, பெரிய ஆர்பாட்டங்களை முன்வைக்கும் எதிர்கட்சிகள், ஏன் கடந்த 4 வருடங்களாக, இத்தகைய முழுமையான போராட்டத்தை முன்வைக்க வில்லை? என்பது பெரும்பாலானவர்களுக்கு ‘புரிந்த’ புதிர் தான்.

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்போம்” என்று திமுக தலைவர் கருணாநிதி நேரடியாக விடுத்திருக்கும் இந்த அறிவிப்பு ஒன்று போதும், 2016 தேர்தல் நெருங்குகிறது என்பதை உணர்த்துவதற்கு. மது ஒழிப்பு குறித்து எந்தவொரு அரசியல் சாயமும் இல்லாமல் போராடிய காந்தியவாதி சசி பெருமாளின் மரணம் தான், இத்தகைய பெரும் போராட்டத்திற்கு களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது என்று யாரேனும் கூறினால், அதனை நாம் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. சசி பெருமாளின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட பாதிப்பை விட, மதுவிற்கு எதிராக அவர், 35 நாட்கள் நடத்திய தொடர் உண்ணாவிரதப் போராட்டம், அதிக வீரியம் மிக்கதாக இருந்தது. அப்போது, இத்தகைய வன்முறைகளோ, டாஸ்மாக் கடை எரிப்பு நிகழ்ச்சிகளோ, எதிர்க் கட்சிகளின் அறைக்கூவல்களோ இல்லை.

ஆனால், தற்போது அதிமுக-வைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் ஒரே அணியில் திரண்டு மது ஒழிப்பிற்காக போராடுகின்றன. வைகோ, “மாணவர்களால் தான் மதுவை ஒழிக்க முடியும். நான் தான் மாணவர்களை தூண்டிவிடுகிறேன்” என்று நேரடியாகவே பத்திரிக்கைகளில் பேட்டி அளிக்கிறார். அதற்கு ஏற்றார் போல், மாணவ-மாணவியரும் போராட்டக் களத்தில் குதிக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டம் அறவழியில் நடந்ததா? என்றால் இல்லை என்றே நடைபெற்ற காட்சிகள் நமக்கு உணர்த்துகின்றன.

#TamilSchoolmychoice

அமைந்தகரையில் நடந்த போராட்டத்தில் டாஸ்மாக் கடையின் மீது பெரிய பெரிய கற்களைக் கொண்டு மாணவர்கள் தொடர்ந்து எறிந்தனர். அவர்கள் நடத்திய தாக்குதலில், கடையின் முன்பு போராடிய மாணவர்களுக்கும் பெரிய அளவில் காயம் ஏற்பட்டது. இதுவா? அறவழிப் போராட்டம். அரசு மதுவிற்பதற்காக, அங்கு பணி செய்யும் ஊழியர்கள் என்ன தவறு செய்தார்கள்? அவர்கள் மீது ஏன் தாக்குதல் நடத்த வேண்டும். உச்சபட்ச வன்முறையாக, சேலத்தில் நடந்த டாஸ்மாக் எரிப்பு சம்பவத்தில், ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பூரண மது ஒழிப்பை அமல்படுத்த வேண்டும் என்று கூறும் எதிர்கட்சிகள், மதுவின் மூலம் கிடைக்கும் 23,000 கோடி வருமானத்தை, வேறு வழியில் ஈட்டுவதற்கான வழிகளைக் கூறுவதே இல்லை. அண்டை மாநிலமான கேரளாவில் நடைமுறைபடுத்தப்பட்ட மது விலக்கு ஏன் இங்கு சாத்தியமில்லை? என்ற கேள்வி எழலாம். கேரளாவில் மது ஒழிப்பு ஒரே இரவில் கொண்டு வரப்படவில்லை. சுமார் 10 ஆண்டுகால திட்டமிடல் அந்த அறிவிப்பில் உள்ளது என்பது பெரும்பாலானவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு நலத்திட்டம் பயனுள்ளதாக இருந்தால், அதனை மேம்படுத்த வேண்டுமே தவிர, முற்றிலும் ஒழிக்கக் கூடாது. திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சி செய்யும் தமிழகத்தில் இந்த அவலம், தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனால், கேரளா போன்று, தமிழக கட்சிகள் ஒன்றிணைந்து தொலைநோக்குப் பார்வையுடன் இந்த மது ஒழிப்பு குறித்த திட்டங்களை வகுக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் பெரும்பாலான இலவச திட்டங்கள், டாஸ்மாக் வருமானத்தை நம்பியே உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. ஓட்டிற்காக, கவர்ச்சிகரமான இலவச திட்டங்களை அறிவித்து அறிவித்து, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்சியில் உள்ள அரசு தள்ளப்படுகிறது. அப்போது அதனை நிறைவேற்ற மதுவின் வருவாய் தேவைப்படுகிறது. கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிக்காமல் தொலைநோக்கான திட்டங்களை செயல்படுத்தும் ஆட்சி அமைய வேண்டும். இது ஆட்சியாளர்கள் கைகளில் மட்டுமல்ல, மக்கள் கைகளிலும் தான் உள்ளது.

இரு கட்சிகளும், மற்றொரு கட்சி ஆட்சியில் அமல்படுத்திய பெரும்பான்மையான திட்டங்களை முற்றிலும் தவிர்த்தாலும், டாஸ்மாக் திட்டத்தை மட்டும் சமரசத்துடன் ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தி வருகின்றன. இதில் மறைந்துள்ள மற்றொரு அரசியலை இங்கு குறிப்பிட வேண்டி உள்ளது. தமிழகத்தில் மது தொழிற்சாலைகள் வைத்திருக்கும் முக்கிய புள்ளிகள், ஏதோ ஒருவகையில், திமுக-அதிமுக கட்சிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கின்றனர். இதனை பேட்டி ஒன்றில், திமுக-வின் மூத்த தலைவர் டி.ஆர்.பாலுவே ஒப்புக் கொண்டு இருக்கிறார். இப்படி, அனைத்து வகையிலும் பெரும் இலாபத்தை ஈட்டித் தரும் மதுவை, இவர்கள் ஒழிப்பார்களா? என்பது கேள்விக் குறி தான். இதையும் மீறி மது ஒழிப்பு சாத்தியப்பட வேண்டும் என்றால், மாற்றம் மக்கள் மனதிலும், அரசியல்வாதிகளின் மனதிலும் எழ வேண்டும். அதுவரை, பூரண மதுவிலக்கு என்பது வாய்மொழி அறிவிப்பாகத் தான் இருக்கும்.

– சுரேஷ்