சென்னை, ஆகஸ்ட் 7- தேசியக் கைத்தறி நெசவாளர் தின விழாவில் கலந்து கொள்வதற்காகச் சென்னைக்கு வந்திருந்த பிரதமர் மோடி, நிகழ்ச்சிக்குப் பிறகு போயஸ் தோட்டத்திலுள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்திற்குச் சென்றார்.
அவரை முதல்வர் ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இருவரும் சுமார் 50 நிமிடங்கள் பல்வேறு அரசியல் நிலவரங்கள் குறித்துப் பேசினர்.
அப்போது, தயாராக வைத்திருந்த, தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகள் அடங்கிய 21 பக்கக் கோரிக்கை மனு ஒன்றை ஜெயலலிதா மோடியிடம் கொடுத்தார்.
அதன்பிறகு, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா தனது இல்லத்தில் மதிய உணவு விருந்தளித்தார். விருந்திற்குப் பின்னர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசினை வழங்கி வழியனுப்பி வைத்தார்.
பிரதமர் மோடி ஜெயலலிதாவின் இல்லம் தேடிச் சென்று சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பல ஊகங்களைக் கிளப்பியது. அடுத்துத் தமிழகத்தில் வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வுடன் பாஜக கூட்டணி அமைப்பதற்கு அச்சாரமாகவே பிரதமர் மோடி ஜெயலலிதாவைச் சந்திக்கச் சென்றார் எனப் பேச்சு எழுந்தது.
இந்நிலையில், இந்தச் சந்திப்பு குறித்துத் தமிழகப் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “பிரதமர் நரேந்திர மோடி-ஜெயலலிதா சந்திப்பிற்கு உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது. அரசுகளுக்கிடையேயான சந்திப்பு வேறு;அரசியல் கட்சிகளுக்கிடையேயான சந்திப்பு வேறு. முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரிக்கவே பிரதமர் அவரைச் சந்தித்தார். இதில் அரசியல் கூட்டணிக்கான முயற்சி ஏதும் இல்லை” என விளக்கம் அளித்துள்ளார்.
ஜெயலலிதாவைச் சந்தித்த பிறகு பிரதமர் மோடி, ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான சோ வீட்டுக்குச் சென்றார்.
உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுக் குணம் அடைந்து வீடு திரும்பியிருந்த சோவிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.
5 நிமிடம் மட்டுமே இந்தச் சந்திப்பு நடந்தது. பின்பு,பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டு மீனம்பாக்கம் விமான நிலையத்திற்குச் சென்றார்.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு சோ பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். “எனது நீண்ட கால நண்பர் மோடி. அவர் என்னைத் தேடி வந்து சந்தித்து உடல் நலம் விசாரித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நட்பு ரீதியான விசயங்களை மட்டுமே பேசினோம். அரசியல் எதுவும் பேசவில்லை. எந்த கோரிக்கையும் வைக்கவில்லை” என்றார்.