சென்னை, ஆகஸ்ட் 6- மத்திய அரசின் சார்பில் சென்னைப் பல்கலைக் கழக வளாகத்தில் நாளை நடைபெற உள்ள கைத்தறி நெசவாளர்கள் விழாவில் பங்கேற்கப் பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் சென்னைக்கு வருகை தருவது இதுவே முதல்முறையாகும் என்பதால் இது மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதற்கு முன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காகத் தமிழகத்திற்கு வருகை தந்த மோடி, நேரடியாக மதுரைக்கு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரத்திற்குச் சென்றார்.
அப்போது உடல்நலக் குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா அப்துல்கலாமின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை என்பதால் மோடியும் ஜெயலலிதாவும் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போனது.
அதற்கு முன்பு, கடந்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டா செல்லும் வழியில் சென்னைக்குப் பிரதமர் வருகை தந்திருந்தார். அப்போது விமான நிலையத்தில் முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடியைச் சந்தித்து வரவேற்றார்.
தற்போது பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாகச் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழகம் வருவதால், மரபுப்படி பிரதமர் மோடியை விமான நிலையத்திற்குச் சென்று ஆளுநர் ரோசய்யா மற்றும் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் வரவேற்க வேண்டும்.
எனவே, ஜெயலலிதா விமான நிலையத்திற்குச் சென்று பிரதமர் மோடியை வரவேற்பார் எனத் தெரிகிறது.
இதற்கும் அப்பால் இன்னொரு வாய்ப்பும் இருக்கிறது. சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டபோது அதை வரவேற்று ஜெயலலிதாவிற்கு வாழ்த்துத் தெரிவித்தவர் மோடி.
தற்போது ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு
எதிராக அமளியில் ஈடுபட்டு வருவதால், நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான அதிமுக-வின் ஆதரவைப் பெறும் நோக்கில் பிரதமர் மோடி, ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்திற்குச் சென்று பேச்சு நடத்தவும் கூடும்.
மேலும், அடுத்த ஆண்டு தமிழகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளதால் ஜெயலலிதாவை நேரில் சந்திப்பதன் மூலம் அதிமுக – பாஜக இடையே கூட்டணிக்கான அடித்தளமிடவும் வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.