கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 – எட்டாயிரம் ரிங்கிட் தொகையை லஞ்சமாகப் பெற்றதாக தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து 6 போலீசார் விசாரணை கோரியுள்ளனர்.
நேற்று குவாந்தானில் உள்ள ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவர்கள் லஞ்சக் குற்றச்சாட்டை மறுத்தனர்.
முவாட்சம் காவல் நிலையத்தைச் சேர்ந்த 6 பேரும், லஞ்சம் வழங்கப்பட்டது குறித்து காவல்துறை நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் 10 ஆயிரம் ரிங்கிட் அல்லது லஞ்சமாகப் பெற்ற தொகையைப் போல் ஐந்து மடங்கு ஆகிய இரண்டில் எது அதிகமோ, அது அபராதமாக விதிக்கப்படும். மேலும் அதிகபட்சமாக 20 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
ரப்பர் போக்குவரத்துக்கான உரிய அனுமதி மற்றும் உரிமம் பெறாத லோரி ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, 6 பேரும் அவரிடம் லஞ்சம் பெற்றனர் என்பது அவர்கள் மீதான குற்றச்சாட்டு. கடந்த டிசம்பர் 18ஆம் தேதி ரோம்பினில் உள்ள உணவகத்தில் அவர்கள் லஞ்சம் பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தலா 5 ஆயிரம் வெள்ளி பிணைத் தொகை மற்றும் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் பிணை வழங்குவதாக நீதிபதி உத்தரவிட்டார்.