கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 – காவல்துறையினர் தங்கள் கடமையை மட்டுமே செய்து வருவதாகவும், எந்தத் தரப்பிலிருந்தும் காவல்துறைக்கு அழுத்தம் வரவில்லை என்றும் ஐஜிபி டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் காவல்துறை யாரிடம் இருந்தும் எத்தகைய உத்தரவுகளையும் பெறவில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட தரப்பினரிடம் இருந்து பெற்ற உத்தரவுகளுக்கு ஏற்ப காவல்துறையின் அண்மைய செயல்பாடுகள் அமைந்துள்ளதாக கூறப்படுவதை காலிட் அறவே மறுத்துள்ளார்.
“நாட்டின் நிலைத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக அரசு மற்றும் வங்கி ஆவணங்கள் வெளியே கசியவிடப்பட்டு, குறிப்பிட்ட தரப்பினர் அவற்றைக் கையாண்டுள்ளனர். இது தொடர்பிலான விசாரணை சரியான கோணத்தில் நடப்பதாக PDRM கருதுகிறது. விசாரணையில் கிடைக்கும் தகவல்கள் அனைத்தும் அட்டர்னி ஜெனரலிடம் அளிக்கப்பட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கான உத்தரவு பெறப்படும்.”
“எந்தவொரு விசாரணையிலும் ஒவ்வொரு அரசு முகமையகத்திற்கும் தனித்தனி பொறுப்புகளும் கடமைகளும் உள்ளன என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனினும் உண்மையைக் கண்டறிவதே அந்த விசாரணையின் நோக்கமாக இருக்கும்,” என்று காலிட் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அடிப்படையில் ஊழல் தடுப்பு ஆணையத்தின் கடமைகளில் காவல்துறை தலையிடுவோ, இடையூறு ஏற்படுத்தவோ இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், அரசு முகமையகங்களுக்கு இடையேயான பணி உறவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் காவல்துறை செயல்படவில்லை என கூறியுள்ளார்.
“தற்போதுள்ள சிக்கலான சூழ்நிலையை சாதமாக்கி அறிக்கைகள் வெளியிட வேண்டாம் என அனைத்துத் தரப்பையும் கேட்டுக் கொள்கிறோம். உள்நோக்கமுள்ள எந்தத் தரப்பிலிருந்தும் எத்தகைய இடையூறுகளும் இன்றி அரசு முகமையகங்கள் தங்களது கடமைகளை செயல்படுத்த உரிய வாய்ப்பும் அவகாசம் அளிக்க வேண்டும்,” என்று காலிட் அபுபாக்கர் மேலும் தெரிவித்துள்ளார்.