கோலாலம்பூர், ஆகஸ்ட் 8 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) இரு முக்கிய அதிகாரிகள் பிரதமர் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை மீண்டும் அதே பொறுப்பில் நியமிக்க வேண்டும் என அந்த ஆணையத்தின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் சுக்ரி அப்துல் (படம்) கேட்டுக் கொண்டுள்ளார்.
“அவர்களுக்கு மாற்றாக என்னை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் எனது இரு அதிகாரிகளையும் உடனடியாக திருப்பிக் கொடுங்கள். எனது உத்தரவுகளை மட்டுமே அவர்கள் இருவரும் செயல்படுத்தி வந்தனர்” என்றார் முகமட் சுக்ரி.
தற்போது முகமட் சுக்ரி அமெரிக்காவில் இருப்பதாகவும், அவர் விரைவில் நாடு திரும்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக வெள்ளிக்கிழமையன்று ஊழல் தடுப்பு ஆணையத்தின் சிறப்பு நடவடிக்கை இயக்குநர் டத்தோ பஹ்ரி முகமட் சின் மற்றும் வியூக தொடர்பு இயக்குநர் டத்தோ ரோஹைசட் யாக்கோப் ஆகிய இருவரும் பிரதமர் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். 1எம்டிபி விசாரணை குறித்த விவரங்கள் வெளியே கசிந்தது தொடர்பில் பஹ்ரி அண்மையில் காவல்துறையால் விசாரிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருவரும் ஒழுங்கு நடவடிக்கைகளின் பேரில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிப்பதாக ஸ்டார் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.