புத்ராஜெயா, ஆகஸ்ட் 7 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) இரண்டு முக்கிய அதிகாரிகள் இன்று வெள்ளிக்கிழமை, பிரதமர் துறையில் உடனடி நியமனத்தின் கீழ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
1எம்டிபி விவகாரத்தில் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மீதான விசாரணை மற்றும் அந்நிறுவனத்தில் இருந்து பிரதமரின் வங்கிக் கணக்கில் புகுந்த 42 மில்லியன் ஆகியவற்றை விசாரணை செய்து வந்த சிறப்பு நடவடிக்கைக்குழுவின் இயக்குநரான டத்தோ பஹ்ரி முகமட் சின் மற்றும் வியூக தொலைத்தொடர்பு இயக்குநர் டத்தோ ரோஹைசட் யாக்கோப் ஆகியோர் பிரதமர் துறையின் கீழ் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
1எம்டிபி விசாரணையில், முக்கியத் தகவல்கள் கசிந்த விவகாரத்தில் புக்கிட் அம்மான் காவல்துறையால் விசாரணை செய்யப்பட்டவர்களின் பஹ்ரியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், இன்று நியமனம் செய்யப்பட்டுள்ள மற்றொரு அதிகாரியான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் வியூக தொலைத்தொடர்பு இயக்குநர் டத்தோ ரோஹைசட் யாக்கோப்பை, நேற்று சந்தித்த எதிர்கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
அதற்கு ரோஹைசட்டும் தனது நன்றிகளைத் தெரிவித்தார். இந்நிலையில், அவர் பிரதமர் துறையின் கீழ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியும், ஆச்சர்யத்தையும் அடையச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.