பஞ்சாப், ஆகஸ்ட் 8- பஞ்சாப்பிலுள்ள அமிர்தசரசில் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உலகையே அச்சுறுத்தும் அதிபயங்கரமான தீவிரவாத அமைப்பாக ஐஎஸ் தீவிரவாத அமைப்பு வளர்ந்து வருகிறது. அல்கொய்தா, லஷ்கர்-இ-தொய்பா அமைப்பையெல்லாம் விஞ்சிய கொடூரமான பயங்கரவாதிகளாக இந்த ஐஎஸ் அமைப்புத் தீவிரவாதிகள் செயல்படுகிறார்கள்.
இவர்கள் உலக அளவில் இளைஞர்களைக் குறி வைத்துத் தங்களது அமைப்பில் சேர்த்துப் பயிற்சியளித்து வருகிறார்கள்.
சமூக வலைதளங்களின் வாயிலாகக் கேரளா பாலக்காட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர், தனது நண்பர்களுடன் சென்று ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளது சமீபத்தில் உளவுத்துறை மூலம்தெரிய வந்துள்ளது. இதுபோல் இந்தியாவிலிருந்து 13 இளைஞர்கள் இந்த அமைப்பில் இணைந்துள்ளது தெரிய வருகிறது.
நைஜீரியாவில் இருந்தும் பல இளைஞர்கள் ஐஎஸ் அமைப்பில் ஆர்வத்தோடு இணைவதாகவும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளி வருகின்றன.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இந்தியாவில் நுழைவதற்கான ஆவணங்கள் ஏதும்இல்லாமல் சுற்றித்திரிந்த ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நைஜீரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் எவ்வாறு இந்தியாவிற்குள் நுழைந்தார்கள், இந்தியாவிற்குள் நுழைந்ததன் நோக்கம் என்ன என்று காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
அவர்கள் சுற்றித் திரிந்த அமிர்தசரசில் தான் சீக்கியர்களுக்கான தங்கக் கோவில் இருக்கிறது. அதனால் நாச வேலைகளில் ஈடுபட சதித் திட்டத்தில் ஏதும் தீட்டியுள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
அமிர்தசரசில் டாக்சி ஓட்டுநர் ஒருவரை ஏமாற்றி, அவரிடமிருந்து காரைத் திருடிக் கொண்டு பாகிஸ்தானுக்கு தப்பியோடி, அங்கிருந்து ஈரான் செல்வதற்கு அவர்கள் திட்டமிட்டிருந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.