கோலாலம்பூர், ஆகஸ்ட் 8 – அமரர் இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களின் படைப்புகள், மின்-பதிவுகளாக மாற்றப்பட்டு, ‘நல்லார்க்கினியர் நற்பதிவுகள்’ எனும் பெயரில் – இன்று சனிக்கிழமை ஆகஸ்ட் 8-ம் தேதி தலைநகர் சோமா அரங்கில் வெளியீடு கண்டது.
இன்று காலை 10.00 மணி முதல் 11.15 மணிவரையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு புகழுடம்பெய்திய இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களின் ‘உங்கள் குரல்’ இதழ்கள் அனைத்தையும் மின்-பதிவுகளாக உருவாக்கும் திட்டம், ஓராண்டு கால முயற்சிக்குப்பின் தற்போது முழுமை பெற்றுள்ளது.
‘நல்லார்க்கினியர் நற்பதிவுகள்’ எனும் பெயரில் இன்று வெளியீடு கண்டுள்ள இந்த மின்பதிவுகளை – மலேசிய மின்னூடகமான ‘செல்லியல்’ நிறுவனமும், உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் மலேசியக் கிளையும் இணைந்து – இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளனர்.
‘உத்தமம்’ மலேசியக் கிளையின் தலைவர் சி.ம.இளந்தமிழ் இத்திட்டத்திற்கான இணைத் தலைமை ஏற்றதோடு, ‘உத்தமம்’ சார்பிலான அனைத்து நிலை ஆதரவையும் வழங்கியுள்ளார்.
இந்த மின்பதிவுத் திட்டத்திற்கான தொழில்நுட்பச் செயலாக்கங்களை, ‘முரசு அஞ்சல்’ செயலியை வெளியிட்ட முரசு நிறுவனமும், ‘ஓம்தமிழ் தொலைக்காட்சி’ நிறுவனமும் இணைந்து வழங்கியுள்ளன.
இந்நிகழ்வில், செல்லியல் நிறுவனத்தின் இணைத் தோற்றுநரும், தொழில் நுட்ப வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன், மின்பதிவுகள் உருவாக்கப்பட்ட விதம் குறித்து விளக்கமளித்ததோடு, அதை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்தும் அரங்கில் இருந்தவர்களுக்கு திரையில் செய்முறை விளக்கம் காட்டினார்.
நிகழ்ச்சியின் நிறைவாக முத்துநெடுமாறன், சி.ம.இளந்தமிழ், செல்லியல் இணை நிறுவனரும், நிர்வாக ஆசிரியருமான இரா.முத்தரசன் மற்றும் மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் மன்னர் மன்னன் ஆகியோர் கவிஞர் சீனி நைனா முகம்மதுவின் படைப்புகளின் மின்பதிவுகளை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தனர்.
அமரர் இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களின் படைப்புகளை மின்பதிவுகளாக கீழ் காணும் இணையதளத்தின் வழியாகக் காணலாம்: