புஜியான், ஆகஸ்ட் 11 – தைவானில் நேற்று முன்தினம் கடுமையான சேதத்தை ஏற்படுத்திய சௌடெல்லார் புயல், நேற்று முதல் சீனாவில் பலத்த சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் புஜியான் மாகாணம் தான் இந்த புயலின் கோர தாக்குதலுக்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. புஜியான் மற்றும் ஜியாங்சி மாகாணங்களில் இதுவரை இந்த புயலின் தாக்குதலால் 21 பேர் பலியாகி உள்ளனர்.
புஜியான் மாகாணத்தின் தலைநகரான பியூஜவ் நகரம் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. அங்குள்ள 16 நகரங்களில் 250 மி.மீ. மழை பெய்துள்ளது. பியூடிங் என்ற நகரில் மட்டும் அதிகபட்சமாக 501 மி.மீ. மழை பதிவாகி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
பாதுகாப்பு நடவடிக்கையாக, 250,000 மக்கள் புஜியான் மற்றும் ஜியாங்சி மாகாணங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட அந்த மாகாணங்களில், முன்னெச்சரிக்கையாக மூன்று விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், 530 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடந்த 100 வருடங்களில் இல்லாத அளவிற்கு மழை பெய்து வருவதால், அதிவேக ரயில்கள் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை மேற்கொள்ள சீன அரசு, பல்லாயிரக்கணக்கான வீரர்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி உள்ளது.