கோலாலம்பூர், ஆகஸ்ட் 11 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) அதிகாரிகள் இருவரை பிரதமர் துறைக்கும் இடமாற்றம் செய்யும் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதற்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
“இது ஆரோக்கியமான முன்னேற்றம். இந்த விவகாரம் தொடர்பில் சூழ்நிலையை அமைதிப்படுத்தவும், இடமாற்றம் குறித்த எதிர்மறை தோற்றம் ஏற்படுவதை தவிர்க்கவும் இந்த முதல்கட்ட நடவடிக்கை உதவும்” என்று கைரி கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கையின் காரணமாக குறிப்பிட்ட அந்த இரு அதிகாரிகள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஊழல் தடுப்பு ஆணையமும் தங்களது விசாரணைகளை எந்தவித குறுக்கீடும், மிரட்டலும் இன்றி தொடர முடியும் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏம்ஏசிசி தனது பணியை செய்ய இயலாத வகையில் குறுக்கீடுகள் இருப்பதாக பொதுமக்களிடையே எதிர்மறை தோற்றம் ஏற்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், அதன் காரணமாகவே அதிகாரிகளின் இடமாற்றம் குறித்து தனது கருத்தை அண்மையில் வெளிப்படுத்தியதாகக் கூறியுள்ளார்.