Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: “வாலு” – தாமதித்தாலும் தரம் குறையாத ஆளு – சிம்பு!

திரைவிமர்சனம்: “வாலு” – தாமதித்தாலும் தரம் குறையாத ஆளு – சிம்பு!

788
0
SHARE
Ad

vaalu-poster-santhanam-hansika-simbuகோலாலம்பூர் – “வாலு” எனப் பெயர் வைக்காதீர்கள் அனுமார் வால்போல் பட வெளியீடு நீண்டு கொண்டே போகலாம் என யாரோ ஆலோசனை கூறியதாக ஒரு தகவல். இருப்பினும், நீண்ட கால தாமதத்திற்குப் பின்னர் நேற்று உலகம் எங்கும் வெளியாகிவிட்டது ‘வாலு’.

இறுதி நேரத்தில் கூட சில பிரச்சனைகள் இருந்ததாகவும் கூறப்படுகின்றது. அதனால் மலேசியாவில் கூட ஏற்கனவே அறிவித்தபடி படம் வெளியாகவில்லை. நேற்றைய முற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இருந்தாலும், படம் நேற்று மாலை மலேசியத் திரையரங்குகளிலும் திரையிடப்பட்டுள்ளது.

தாமதமாக வந்தாலும் படம் இரசிக்கும்படி, இறுதிவரை கலகலப்பாக, செல்கின்றது.

#TamilSchoolmychoice

படத்தின் சிறப்புக்கும் வெற்றிக்கும் காரணம், குறிப்பிடத்தக்க ஆறு  அம்சங்கள். முதலாவது சிம்பு, இரண்டாவது ஹன்சிகா, மூன்றாவது சந்தானம், நான்காவது கண்ணைக் கவரும் ஒளிப்பதிவு, ஐந்தாவதாக உயிரோட்டமான, கைத்தட்டல் பெறும் வசனங்கள், ஆறாவதாக இவற்றையெல்லாம் சரியான முறையில் கலவை செய்து கையாண்டிருக்கும் இயக்குநர் விஜயசந்தரின் திறமை.

கதை – திரைக்கதை

இந்தப் படத்தில் வரும் கதை, திரைக்கதை, கதாபாத்திரங்கள் எல்லாமே அதரப் பழசுதான். ஆனால், இயக்குநர் அமைத்திருக்கும் திரைக்கதையும், அதில் நுழைத்திருக்கும் வித்தியாசமாக சம்பவங்களும், சிம்பு-சந்தானம்-ஹன்சிகா – கூட்டணியின் நடிப்பும்தான் படத்தை நாம் நிமிர்ந்து உட்கார்ந்து இறுதிவரை பார்த்து ரசிப்பதற்கு உதவியிருக்கின்றன.

vaalu-poster-simbu-hansikaவழக்கம்போல் வேலையில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் சிம்புவுக்கு, சந்தானம், விடிவி கணேஷ் ஆகியோர் நட்புக் கூட்டணி. அப்பா இரயில் வண்டி ஓட்டுநர். ஒரு தங்கை. பாசத்தைப் பொழியும் அம்மா.

நமது எல்லா தமிழ்ப்படக் கதாநாயகர்களைப் போலவே அழகி ஹன்சிகாவை பஸ் நிலையத்தில் முயல்குட்டியுடன் பார்க்கின்றார் சிம்பு. உண்மைதான், நாய்க் குட்டியுடன் வலம் வந்த நமது நாயகிகளின் மத்தியில் தெருவில் முயல் குட்டியுடன் நடந்து வந்து பஸ் ஏறிய முதல் கதாநாயகி இந்தப் படக் கதாநாயகியாகத்தான் இருக்க முடியும்.

ஹன்சிகாவைப் பார்த்தவுடன் மனதைப் பறிகொடுக்கும் சிம்பு, அவரைத் தேடுவதும், இருவரும் காதல் கொள்வதும், பின்னர் ஊடல் கொள்வதுமாக கதை இடைவேளை வரை நகர்கின்றது.

இதற்கிடையில் அந்த ஊரில் வட்டிக்கு விட்டு பெரிய அடியாள் தாதாவாக வலம் வருகின்றார் வில்லன் ஆதித்யா. இவர் படத்திற்கு புதிய அறிமுகம். கன்னட நடிகராம். ஒரு சம்பவத்தில் வில்லனுடைய ஆட்களுக்கும் சிம்புவுக்கும் இடையில் மோதல் ஏற்படுகின்றது.

சிம்பு-ஹன்சிகா காதல் கைகூடும் நேரத்தில் ஹன்சிகா அவரது மாமா பையனை மணம் முடிப்பதாக சொல்லி விட்டதாகக் கூறுகின்றார். சிம்புவோ சோகத்தில் மூழ்காமல், தனது நண்பர்களிடம் சவால் விடுகின்றார் – “அவள் கல்யாணம் பண்ணப் போவதாகத்தான் கூறுகின்றார். காதலிப்பதாகக் கூறவில்லையே! எனவே, இனி அவளை நான் காதலித்து மடக்குகின்றேன்” என்று.

பின்னர்தான் தெரிய வருகின்றது, ஹன்சிகாவின் மாமா பையன் அந்த வில்லன் ஆதித்யாதான் என்று. இருந்தாலும் பயப்படாமல் சவாலைத் தொடர்கின்றார் சிம்பு.

இரண்டு வருடங்களுக்குப் பின்னர் என முடிவு செய்யப்பட்ட கல்யாணத்தை கூடிய விரைவில் நடத்துவோம் என வில்லன் திடீரென மனம் மாற, அடுத்த பத்து நாட்களுக்குள் சிம்பு ஹன்சிகாவை காதலில் எப்படி விழ வைக்கின்றார் என்பதையும்,

அவர்களின் காதல் கல்யாணமாக கைகூடியதா – வில்லன் என்ன செய்தார் என்பதையும் இரண்டாம் பாதிக் கதை சொல்கின்றது.

சிம்புவின் தனித்துவ நடிப்பு

படத்தை இறுதி வரை கலகலப்பாக கொண்டு செல்வது சிம்புவின் நடிப்புதான். படத்தில் வரும் எந்த சம்பவத்திற்கும் ஏற்ற மாதிரி இயல்பான, முக பாவங்களுடன், உடல்மொழியுடன் அவர் நடித்திருக்கின்றார்.  அவரை ஹீரோத்தனமாகக் காட்டாமல், அவரை உயர்த்திப் பேசும் வசனங்கள் வைக்காமல் படத்தை எடுத்திருக்கின்றார்கள்.

Santhanam-simbu-vaalu-இருந்தாலும், படத்திற்கு பெரிதும் துணைபுரிபவை வசனங்கள். சிம்புவுக்கென்றே இழைத்து இழைத்து எழுதியிருக்கின்றார்கள். பல இடங்களில் சக நடிகர்களைத் தனது பாணியில் புண்படாமல் கலாய்க்கின்றார் சிம்பு.

திருடனை விரட்டிக் கொண்டு ஓடும் இடத்தில் வழியில் ஒரு சிறுமியைப் பார்த்து கைகுலுக்கி ‘உனது பெயர் என்ன’ என்கின்றார். சிறுமியோ நயன்தாரா என்றதும் ‘நைஸ் நேம்’ என்கின்றார்.

இன்னொரு கட்டத்தில் சென்றாயன் நடிப்பைப் பார்த்து “என்னடா இவன் ரொம்ப மெனக்கெட்டு தனுஷ் மாதிரி நடிக்கிறான்” என கலாய்க்கின்றார் சிம்பு.

Vaalu-release-Simbu-entering theatre-

நேற்று சென்னையில் படம் வெளியிடப்பட்ட காசி திரையரங்கில் இரசிகர்களோடு படம் பார்க்க வரும் சிம்பு (படம்: டுவிட்டர்)

படத்தின் உச்சகட்டமாக வரும் இறுதிப் பாடலில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, அஜித் என பல கெட்டப்புகளில் வந்து கலகலப்பூட்டுகின்றார்.

ஏற்கனவே, பட்டி தொட்டிகளில் எல்லாம் பிரபலமாகிவிட்ட ‘நயன்தாரா வேண்டாம், அந்த ஆண்ட்ரியாவும் வேண்டாம்’ என்ற பாடலிலும் சில நடிகைகளைக் கலாய்த்திருக்கின்றார் சிம்பு.

பாடல் காட்சிகளில் உடம்பை வில்லாக வளைத்து இரசிக்கும்படியான நடனங்களையும் வழங்குகின்றார்.

வசனங்கள் – மற்ற நடிகர்கள்

காதல் ஜோடிகளை மட்டுமே நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்ட வசனங்கள் அவ்வளவு பொருத்தமாக சிம்புவுக்கும் பொருந்துவது, யதேச்சையான ஒன்றா, அல்லது இயக்குநர் திட்டமிட்டே அவ்வாறு வசனங்களை அமைத்தாரா என இரசிகர்கள் ஒரு கணம் யோசிக்கும் வண்ணம் வசனங்கள் அமைந்திருக்கின்றன.

சிம்புவுக்கு  நல்ல ஒத்துழைப்பு சந்தானமும், விடிவி கணேஷூம். படம் முழுக்க கலகலப்பூட்டுகின்றார்கள்.

வில்லன் ஆதித்யா படம் முழுக்க மிரட்டுகின்றார். அவரது மிடுக்கும், கண்டிப்பும், கடன் கொடுக்காதவர்களை வித்தியாசமாக மிரட்டி வாட்டி எடுப்பதும் கவர்கின்றது. இறுதிவரை அவருக்கும் சிம்புவுக்கும் இடையில் நடக்கப் போகும் மோதல் பலத்த எதிர்பார்ப்புடன் பின்னப்பட்டிருக்கின்றது. இருந்தாலும் அவர்கள் இருவருக்கும் இடையிலான சம்பவங்களை பரபரப்பு கூட்டி ஆனால் அந்தக் காட்சியை சண்டையில்லாமல் சாமர்த்தியமாக முடிப்பதில் இயக்குநரின் சிந்தனை வெளிப்படுகின்றது.

வில்லன்-சிம்பு இடையிலான இறுதிக்கட்ட மோதல் வித்தியாசமாக முடிக்கப்பட்டிருந்தாலும், அதுவும் நிச்சயம் இரசிகர்களைக் கவரவே செய்யும்.

ஹன்சிகா சொல்லவே வேண்டியதில்லை. எவ்வளவு நேரம் வந்தாலும் அலுக்காமல் பார்க்கலாம். சின்னச் சின்ன வார்த்தைகளுக்கும் அவர் காட்டும் முகபாவங்கள் கவர்கின்றது.

எஸ்.எஸ்.தமன் இசையில் பாடல்கள் ஏற்கனவே பிரபலமாகிவிட்டன. அந்தப் பாடல்களை எடுத்திருக்கும் விதமும்  நிச்சயம் இரசிகர்களைக் கவரும்.

சண்டைக்காட்சிகளை சுருக்கமாக முடித்திருப்பது படத்திற்கு விறுவிறுப்பைக் கூட்டியிருக்கின்றது. இருந்தாலும், எப்போதும் போல் சிம்புவிடம் அடிவாங்குபவர்கள் வானம் உயரத்துக்கு எகிறிப் போய் கீழே விழுவதுதான் நெருடல்.

ஒளிப்பதிவு – படத்தொகுப்பு– இயக்கம்

படத்தை இரசிக்க வைத்திருக்கும் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் ஒளிப்பதிவு. ஒளிப்பதிவாளர் சக்தியின் தெளிவான, அழகான, பளிச்சென்ற படப்பிடிப்பு.

அதற்கேற்ற முறையில் படத் தொகுப்பு (எடிட்டிங்) விறுவிறுப்பாகக் கையாளப்பட்டிருக்கின்றது. படத் தொகுப்பை டி.எஸ்.சுரேஷ் கவனித்திருக்கின்றார்.

இயக்குநர் விஜயசந்தருக்கு இது முதல் படமாம். நம்ப முடியவில்லை. தெரிந்த கதைக் களம்தான் என்றாலும், வித்தியாசமாக யோசித்து, சம்பவங்களை அமைத்து, சுவாரசியமான திருப்பங்களோடு, நன்கு ஆராய்ந்து வசனங்களை அமைத்திருக்கின்றார்.

தாமதமாக வந்தாலும், தனது சினிமா ஆளுமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்து வெற்றி வாகை சூடியிருக்கின்றார் வாலு சிம்பு!

தாராளமாகப் பார்க்கலாம்!

இரா.முத்தரசன்