பெய்ஜிங், ஆகஸ்ட் 15 – சீனாவின் தியான்ஜின் நகரில், இரசாயனப் பொருட்கள் சேமித்து வைத்திருக்கும் கிடங்கில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட மிகப் பெரும் தீ விபத்தில் இதுவரை 85 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 20-க்கும் மேற்பட்டவர்கள் தீயணைப்புப் படைவீரர்கள் என்று கூறப்படுகிறது. மேலும், 721 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 25 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிபத்து ஏற்பட்டு மூன்று நாட்களாகியும் தீயை கட்டுப்படுத்த முடியாதது பற்றி தீயணைப்புக் குழு கூறுகையில், “சேமிப்புக் கிடங்கில் இரசாயனப் பொருட்கள் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கின்றன. அவற்றை தண்ணீர் ஊற்றி அணைப்பது அவ்வளவு எளிதானதாக இல்லை. மீட்புக் குழுவினர் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வருகின்றனர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.