கூச்சிங், ஆகஸ்ட் 20 – முதல்வர் பதவியில் மேலும் 5 ஆண்டுகள் நீடிக்க தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என சரவாக் முதல்வர் டான்ஸ்ரீ அட்னான் சாத்தேம் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் 5 ஆண்டுகள் பதவியில் நீடிக்கும் பட்சத்தில் தனக்கு 76 வயது பூர்த்தியாகிவிடும் என்றும் அதற்கு மேல் பதவியில் தொடர விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
“கடந்த ஓராண்டுக்கு மேலாக முதல்வர் பதவியில் உள்ளேன். இதைச் செய்தேன், அதைச் செய்தேன் என்று சொல்வதை விட, இம்மாநிலத்திற்கும் மக்களுக்கும் ஆதாயம் தரக்கூடிய மேலும் பலவற்றை செய்ய விரும்புகிறேன்,” என்றார் அட்னான் சாத்தேம்.
கடந்த 2011-ல் சரவாக் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. நடப்பு சட்டமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் முடிவடைகிறது. இந்நிலையில் முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டும் எனும் தனது விருப்பத்தை அட்னான் சாத்தேம் வெளிப்படுத்தி உள்ளார்.
“மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டியுள்ளது. எனவே அடுத்த 5 ஆண்டுகளுக்கு பதவியில் நீடிக்க சரவாக் மக்கள் எனக்கு வாய்ப்பளிப்பார்கள் என நம்புகிறேன். அதன் மூலம் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த முடியும்,” என்று கூச்சிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அட்னான் சாத்தேம் தெரிவித்தார்.